செய்திக் குறிப்புகள்

இயக்குநர் ராஜுமுருகன் தயாரித்துள்ள படம் – விவரங்கள்

நவம்பர் 23 அன்று இயக்குநர் லோகேஷ்கனகராஜ் பராரி எனும் படத்தின் முதல்பார்வையை வெளியிட்டார். அரை நிர்வாணத்துடன் நாயகனும், அவர் அருகில் கிழிந்த ஆடையுடன் நாயகியும் உடல் முழுவதும் காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் உட்கார்ந்திருக்க, அவர்களைச் சுற்றி மக்கள் கூட்டம் வேடிக்கை பார்ப்பது போன்ற முதல் பார்வை கவனம் ஈர்த்திருக்கிறது.

அப்படம் பற்றிய விவரம்…

ராஜுமுருகனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எழில்பெரியவேடி இயக்கியிருக்கும் படம் பராரி. இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ படத்தில் நாயகனாக நடித்த ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் புதுமுகங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு சுமார் 6 மாதங்கள் முறையான நடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் ஆர்.டி.எக்ஸ் படத்தொகுப்பு செய்ய, உமா தேவி பாடல்கள் எழுதியுள்ளார். ஏ.ஆர்.சுகுமாரன் கலை இயக்குநராகப் பணியாற்ற, எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி ஒலி வடிவமைப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். ஃபயர் கார்த்தி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, அபிநயா கார்த்திக் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.

‘பராரி’ என்பது தங்கள் சொந்த இடங்களில் இருந்து, பல்வேறு இடங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கும் சொல்.

திருவண்ணாமலையைச் சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்கள் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் பேசுவதுதான் படத்தின் கதை.

சாதி, மதம் ஆகியனவற்றை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமகால அவலங்களைப் பேசுவதோடு, சாதி மதத்தை வைத்து அரசியல் செய்யும் இந்த மானுடச் சமூகத்தை அறத்தோடு கேள்வி கேட்கும் விதமாகவும் உருவாகியுள்ளது இப்படம்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள், பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 45 நாட்களுக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

Related Posts