கட்டுரைகள்

தனுஷ் செய்வதை ரஜினி,விஜய்,அஜீத் ஆகியோர் செய்யாதது ஏன்?

இயக்குநர் ராம் உடன் பணியாற்றிய மாரிசெல்வராஜ் எழுதி இயக்கியிருக்கும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல்பார்வை பிப்ரவரி 13,2018 அன்று வெளியானது. அதையொட்டி இயக்குநர் வெற்றி எழுதியுள்ள பதிவு….

 

பரியேறும் பெருமாள் மூலமாக ஒரு விண்ணப்பம்!!

பா.ரஞ்சித் தயாரிப்பில் நண்பன் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் வெளியாக இருக்கிறது. மகிழ்ச்சி. மாரி என்னுடைய இயக்குநர் செந்தமிழன் மூலமாக எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான நண்பன். சிறந்த படைப்பாளி. சிந்தனையாளன். இப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை அடையும். இப்படத்தைப் பற்றி எழுதி உள்ள இயக்குநர் ராம், சக படைப்பாளியை அங்கீகரிப்பதும் அவர்களுக்கு தன்னுடைய இடத்தை பங்கு கொடுப்பதும் பண்பட்ட படைப்பாளிகளால் மட்டுமே முடியும் என்று பா.ரஞ்சித்தை பாராட்டி இருக்கிறார்.

நிற்க. பா.ரஞ்சித்தை போல இயக்குநர் ஷங்கர் தமிழ்ச் சினிமாவுக்கு குறிப்பிடத் தக்க படங்களை தயாரித்து வழங்கியிருக்கிறார். சிம்பு தேவனின் இம்சை அரசன், பாலாஜி சக்திவேலின் காதல், வசந்தபாலனின் வெயில் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இதே போல நடிகர் தனுஷ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் எதிர் நீச்சல், காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்களை தந்திருக்கிறார். ஆனால், தமிழ்ச்சினிமாவில் முன்னணியில் இருந்த இருக்கும் பல நடிகர்கள், இயக்குநர்கள் படம் தயாரிக்க முன் வருவது இல்லை. தனுஷ் மூலமாக காக்கா முட்டை மணிகண்டன் என்ற மிகப் பெரிய திரை ஆளுமைகள் தமிழுக்கு அறிமுகமாகி இருக்கிறார். ரஜினி நாற்பது ஆண்டுகளாக தமிழ்ச்சினிமாவில் இருக்கிறார். எத்தனை படங்களை தயாரித்திருக்கிறார்? எத்தனை இயக்குநர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்?

சிவகார்த்திகேயன் கூட சொந்தப்படம் எடுக்கிறார். ஆனால் வேறு நடிகர்கள் இயக்குநர்களை வைத்து அவர் படம் தயாரிக்க வேண்டும் என்பதே விருப்பம்.

திரைஆளுமைகள் படம் தயாரிக்கும் போது, மக்கள் மத்தியில் அதற்குக் கவனம் கிடைக்கிறது. காக்கா முட்டை தனுஷ் வெற்றி மாறன் தயாரிக்கும் படம் என்பதால் படம் வெளியாகும் முன்பே கவனம் பெற்றது.

விஜய் மற்றும் அஜித்திடம் படம் தயாரிக்க பணம் இல்லையா? வருடத்திற்கு குறைந்த பட்சம் ஒரு கோடியில் ஒரு படம் தயாரிக்க முடியாதா? திறமைசாலிகளை அடையாளப்படுத்த முடியாதா? ஏன்
செய்வதில்லை?

படத் தயாரிப்பில் ஈடுபடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று ஒதுக்கிவிட முடியாது. தமிழ்ச்சினிமாவில் இருந்து சம்பாதித்தில் தமிழ்ச் சினிமாவுக்காக ஒரு விழுக்காடு கூட ஒதுக்க மாட்டேன் என்பது என்ன நியாயம்? இந்த விமர்சனம் கமல் மீது உண்டு. அவரது தயாரிப்பு நிறுவனம் ஒரு வட்டத்தைத் தாண்டி வரவே இல்லை.

ரஜினி, விஜய், அஜித் போன்றவர்வர்களின் படங்கள் பெரும் வியாபாரமாகிவிட்டதால் அதில் சோதனை முயற்சிகளை செய்ய முடியாது. இவர்கள் தன் சம்பாத்தியத்தில் சிறு தொகையை ஒதுக்கினால் காக்கா முட்டை, விசாரணை போன்ற நல்ல படைப்புகளைக் கண்டறிந்து வெளிக் கொண்டு வர முடியும். தனுஷ் செய்கிறார். வெற்றி மாறன் செய்கிறார். ஷங்கர் செய்தார். ஏன் இவர்கள் செய்யக்கூடாது?

எனி வே,
மாரி செல்வத்துக்கு வாழ்த்துகள். பரியேறும் பெருமாள் வெற்றி பெற்று, அவரும் விரைவில் தயாரிப்பாளர் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறேன். நல்ல படைப்பாளிகள் தயாரிப்பாளர்கள் ஆவது சினிமாவுக்கு ஆரோக்கியமானது.

Related Posts