சிம்பு மீதான புகாரில் உள்நோக்கம் – தயாரிப்பாளர் மீது சந்தேகம்
ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தைத் தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன்.
இவர், சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.
சிம்பு 60 நாட்கள் தேதி கொடுத்துவிட்டு 27 நாட்கள் மட்டுமே நடித்துக் கொடுத்தார். டூப் நடிகரை வைத்து பல காட்சிகளை படமாக்கினோம். படம் முடிந்த நிலையில் அதை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்றார். இரண்டாம் பாகத்தில் அவர் நடித்துக்கொடுக்கவில்லை. படப்பிடிப்பில் அவர் ஒத்துழைப்பு அளிக்காததால் படம் திரைக்கு வந்து நன்றாக ஓடவில்லை. இதனால் ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டு உள்ளது. இதை சிம்பு ஈடு செய்ய வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை நடத்தியது. ஆனாலும் இரு தரப்புக்கும் இடையே இன்னும் சமரசத் தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் சுந்தர்.சி இயக்கும் படத்தில் சிம்பு நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மைக்கேல் ராயப்பன் எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
சிம்புவால் நஷ்டமடைந்ததற்கு எனக்கு நியாயம் வேண்டும். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தை நம்பி இருக்கிறேன். எனது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் சிம்பு வேறு படங்களில் நடிக்கக்கூடாது. இப்போது அவர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்புகொண்டு மீண்டும் புகார் செய்து இருக்கிறேன். படப்பிடிப்பு நடத்த அனுமதிக்ககூடாது. தயாரிப்பாளர் சங்கம் எனக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மைக்கேல் ராயப்பன் புகார் கொடுத்த பிறகு, சிம்பு மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார். அப்போதெல்லாம் மைக்கேல் ராயப்பன் ஒன்றும் செய்யவில்லை. இப்போது சுந்தர்.சி இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கும்போது மீண்டும் புகார் சொல்வது ஏன்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.











