பராசக்தி – திரைப்பட விமர்சனம்
1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள்.தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குழு அறிவித்தபடி, 1965 பிப்ரவரி 12ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடைபெற்றது.
அன்றைய தினம், உள்ளூர் மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொள்ளாச்சி நகரிலும் முழுக்கடையடைப்பு நடைபெற்றது. காலை 10.00 மணி அளவில், பாலக்காடு சாலையில் உள்ள அஞ்சலகம் முன்பு சில மாணவர்கள் கூடி இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். மாணவர்களுக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்களும் திரண்டு விட்டனர். அந்த வேளையில் உயர்நிலைப்பள்ளி மாணவன் ஒருவன் அஞ்சலகத்தின் மேல் ஏறி, அஞ்சலகப் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழிக்க முயற்சித்தான். அவன் அஞ்சலகத்தின் மேல் ஏறிச்சென்றதைத் தடுக்காமல், அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவலர்கள், திடீரென்று அவனை இந்தி எழுத்தை அழிக்காமல் கீழ இறங்குமாறு கூறினர். ஆனால், அதற்கு அந்த மாணவன் மறுத்துவிடவே, அவனைத் துப்பாக்கியால் சுடப்போவதாகக் காவலர்கள் மிரட்டினர். அதற்கு அஞ்சாமல், அந்த மாணவன் இந்தி எழுத்தை அழித்தான். உடனே, ஒரு காவலர் அவனைக் குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டார். அவன் அந்த இடத்திலேயே விழுந்து துடிதுடித்துச் செத்தான்.இதனால் கலவரம் வெடித்தது.
காவலர்கள் கோயம்புத்தூரில் உள்ள உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இராணுவ உதவியைக்கேட்டனர். அதன்படி, ஆறு வண்டிகளில் இராணுவத்தினர் பொள்ளாச்சிக்கு ஏறத்தாழ நடுப்பகலின்போது வந்து சேர்ந்தனர்.
1938 லிருந்து நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போராட்ட வரலாற்றில் போராட்டத்தை அடக்க இராணுவம் தமிழ்நாட்டிற்கு முதல்முறையாக வந்தது. 1965 இல் தான்.நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.பொள்ளாச்சி ஒரு பெரிய சுடுகாடு போல் காட்சியளித்தது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த வரலாற்றை கண்முன் கொண்டுவந்திருக்கும் படம் பராசக்தி.
படத்தில், இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடும் புறநானூற்றுப் படை எனும் மாணவர் அமைப்பை தலைமை தாங்கி வழிநடத்துகிறார் நாயகன் சிவகார்த்திகேயன்.ஒருகட்டத்தில் தனது தோழனின் இழப்பால் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு தொடர்வண்டித் துறையில் சாதாரண ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரியில் படிக்கும் சிவகார்த்திகேயனின் தம்பி அதர்வா, இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபடுகிறார். இந்தித் திணிப்புக் கொள்கையினால் தமிழர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். சிவகார்த்திகேயனும் இந்தி மொழியால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படுகிறார். மறுபக்கம் அவரது தம்பி அதர்வா மற்றும் அவரது நண்பர்கள் இந்தித் திணிப்புக்கான தங்களது போராட்டங்களைத் தீவிரப்படுத்துகிறார்கள்.
அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறது படம்.
மொழிப்போர் வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.அவ்ருடைய தோற்றம்,உடைகள் மற்றும் உடல்மொழி ஆகியன அந்தக்காலகட்டத்தை அப்படியே பிரதியெடுத்தது போல் அமைந்திருக்கின்றன.இது ஒரு திரைப்படம் நாம் நடிக்கிறோம் என்றில்லாமல் செழியன் என்கிற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீலீலா அழகான வரவு.அவர் கதாநாயகனைக் காதலிப்பதோடு நில்லாமல் கதையிலும் ஒரு பாகமாய் இருக்கிறார்.நன்றாக நடித்து பலம் சேர்த்திருக்கிறார்.
காவலதிகாரியாக நடித்திருக்கும் ரவிமோகன், கண்களிலேயே வில்லத்தனம் காட்டி மிரட்டுகிறார்.ஏற்றுக் கொண்ட பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்து வெறுப்பைச் சம்பாதிக்கிறார்.
அதர்வாவுக்கு இது மிக நற்பெயர் பெற்றுத்தரும் படம். துடிப்பும் துள்ளலுமான கதாபாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ராணா டகுபதி,பசில் ஜோசப் ஆகியோரும் நன்று.
ஒளிப்பதிவாளர் ரவிகே.சந்திரன், கலை இயக்குநர் அண்ணாதுரை, உடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ஆகியோர் உழைப்பால் நாம் காலச் சக்கரத்தில் ஏறி அறுபதாண்டுகள் பின்னோக்கிச் சென்ற உணர்வு ஏற்படுகிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் காதல் பாடல்கள் குளிர் மழையாகவும் கொள்கைப் பாடல்கள் எரிமலையாகவும் இருக்கின்றன.
பின்னணி இசையில் முறுக்கேற்றியிருக்கிறார்.
இயக்குநர் சுதாகொங்கரா, வரலாற்றை ஊன்றிப் படித்து அதன் வீரியம் குறையாமல் திரை மொழியில் கொடுத்திருக்கிறார்.தீ பரவி விட்டது.
– கதிரோன்











