3 ஆண்டுகள் தவமிருந்து வ.கெளதமன் உருவாக்கிய படையாண்ட மாவீரா – சிறப்புகள்

வ.கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ.கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன்,’ஆடுகளம்’ நரேன்,மன்சூர் அலிகான்,ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி,’தலைவாசல்’ விஜய்,சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி.எஸ். ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் சுயசரிதையைத் தழுவி தயாராகி இருக்கும் இந்தப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ்,எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.இந்தப்படத்தில் வ.கௌதமன், ஈ.குறளமுதன்,
யு.எம்.உமாதேவன்,கே.பாஸ்கர்,கே.பரமேஸ்வரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பங்காற்றியுள்ளனர்.
வரும் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக் குழுவினர் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி.என்.அழகர் இப்படத்தை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் செப்டம்பர் 8 அன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் இயக்குநர்
வ.கௌதமன்,பாடலாசிரியர் வைரமுத்து, வசனகர்த்தா பாலமுரளி வர்மா,ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடிகர்கள் இளவரசு, கராத்தே ராஜா, தமிழ் கௌதமன், தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வசனகர்த்தா பாலமுரளி வர்மா பேசுகையில்….
ஒரு திரைப்படம் வெள்ளைத் தாளில் தொடங்கி வெள்ளித் திரைக்கு வருகிறது. இந்தப்படத்தின் பணிகளைத் தொடங்கிய போது பல கேள்விகளை எதிர்கொண்டோம்.அதில் ஒன்று எதற்காக இந்த வேலை? ஏனெனில் நாம் இப்போது நரேட்டிவ் சொசைட்டியில் (Narrative Society) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு ஏற்கனவே என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ,எதை காதில் வாங்கிக் கொண்டிருக்கிறோமோ,அதன் அடிப்படையில்தான் நாம் எல்லாவற்றையும் அணுகுகிறோம்.இன்னும் சொல்லப்போனால் காதுகளில் வழியாகத்தான் குரல் கொடுப்பவர்களாக இருக்கிறோம்.அதன் அடிப்படையில்தான் இந்த இனம் பிரச்சாரப் போரில் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர் தலைவர் உருவாகி வரும் போதெல்லாம் மிக எளிதாக அவர்களை பல்வேறு அவதூறுகளால் வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி வீழ்த்தப்பட்ட உண்மையான மக்கள் தலைவர் ஒருவர் தான் அண்ணன் காடுவெட்டி குரு.அவர் வீழ்ந்தாரா என்றால் வீழவில்லை.ஆனால் அவரைப் பற்றி இன்றைக்கு எல்லோர் மனதிலும் எம்மாதிரியான பிம்பம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்தால்…! அதைத் திருத்தி உண்மையான காடுவெட்டி குரு யார்,ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பவர் எப்படிச் செயல்பட வேண்டும், தான் நேசித்த மக்களுக்காக ஒரு தலைவன் எப்படி இயங்கவேண்டும் என்று சொல்ல வேண்டிய கடமை ஒரு படைப்பாளியாக எமக்கு இருக்கிறது.
நாங்கள் மக்கள் தொலைக்காட்சிக்காக ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றையும், மாவீரன் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றையும் படைப்பாக உருவாக்கிய போது சென்னையில் உள்ள அலுவலகத்தில் மருத்துவர் ஐயா இராமதாசு மற்றும் காடுவெட்டி குரு ஆகியோரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.இங்கு அவரைப்பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிம்பத்திற்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவர் ஒரு குழந்தை போன்றவர்.நகைச்சுவை உணர்வு கொண்டவரும் கூட.இவரைப்பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை பற்றி நாங்கள் அந்த தருணத்திலேயே சிந்தித்தோம்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் மக்களுக்காக எப்படிச் செயல்பட வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியாது.ஆனால் ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுரங்கம் தோண்டுவதற்கான பணிகளைத் திட்டமிட்டபோது அதனை எதிர்த்து தீரமுடன் போராடி, வரவிடாமல் தடுத்தவர் காடுவெட்டி குரு.அரியலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வழங்கவில்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தை தீயிட்டுக் கொளுத்துவேன் என்று பேசியவர் காடுவெட்டி குரு.பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் நலனுக்காகச் செயல்படவில்லை என்று அந்த அலுவலகத்தை பூட்டுப்போட்டு சாவியை எடுத்துச் சென்றவர் காடுவெட்டி குரு.அழகாபுரத்தில் அம்பேத்கரின் முழுஉருவச் சிலையை அமைத்தார். ஒடுக்கப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் மாலை போட்டு அழைத்துச் சென்றார்.வயல்வெளிகளில் மின்கோபுரம் அமைக்கப்பட்டபோது அதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள விவசாயிகளுக்காக எதிர்த்துப் போராடினார்.இப்படி மக்களுக்காக வாழ்ந்த தலைவர் காடுவெட்டி குரு.மக்களுக்காக வாழ்ந்த காடுவெட்டி குருவின் இந்த முகம் மறைக்கப்பட்டிருக்கிறது.இதனைத் திட்டமிட்டு மறைத்தார்கள்.37 ஆண்டுகள் அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்றிய அவர் தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை.சேர்த்துக் கொள்ளவில்லை.தன்னிடம் உள்ளதை விசுவாசம் உள்ள தலைமைக்கும், மக்களுக்கும் செலவழித்தார்.மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பணத்தால் விலைக்கு வாங்க முடியாத தலைவராகவும் திகழ்ந்தார்.இவ்வளவு நேர்மையான ஒரு தலைவரின் அசலான பிம்பம் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. திட்டமிட்டு அவர் மீது வேறொரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.
இன்றைக்கு நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நுரையீரல் தொற்று நோய்கள் அதிகம்.சிறுநீரகச் செயலிழப்புகளும் அதிகம்.இதற்குக் காரணம் அரியலூரில் இயங்கிவரும் சிமெண்ட் ஆலைகள்.இதனால் அப்பகுதியில் காற்று இயல்பை விட அளவுக்கு அதிகமாக மாசுபட்டிருக்கிறது.அங்குள்ள நீரில் பாதரசமும்,செலினியமும் இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.அனுமதிக்கப்பட்ட அளவைவிட எட்டுமடங்கு அதிகமாக காற்றில் கார்பன் டை ஆக்சைடு கலந்திருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே தெரிவிக்கிறது.நுரையீரல்,சிறுநீரகம்,கல்லீரல் இப்படி உடல்உறுப்பு பாதிப்புகளுடன்தான் அப்பகுதியில் மக்கள் வாழ்கிறார்கள்.இந்தச்சூழலில்தான் காடுவெட்டி குரு அவர்கள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாமல் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்தார்.தினமும் மக்கள் அங்கு மரணத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.இதை எதிர்த்து யாராவது போராடினார்களா? இதை எதிர்த்துப் போராடியவர்தான் காடுவெட்டி குரு.இதை படைப்பின் மூலமாகச் சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு இருந்தது.அதனால்தான் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.அதேதருணத்தில் இந்தப்படம் கருத்துகளை மட்டுமே பேசுகிற படமாக இல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாகவும் உருவாக்கி இருக்கிறோம்.இந்தப்படத்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நடிகர் இளவரசு பேசுகையில்….
விருத்தாசலம் என்பதை அம்மண்ணின் மக்கள் ‘விருதாசலம்’ என்று பேசுவதை தங்கர்பச்சான் மூலம்தான் முதன்முதலில் கேட்டேன். தங்கர்பச்சான் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவர்தான் கௌதமன்.இந்தப்படத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.படப்பிடிப்பிற்காக ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சென்றபோது அங்கு ‘கடலை ‘விவசாயம் இன்னும் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன்.இயக்குநர் கௌதமனின் உண்மையான உழைப்பும், அவருடைய ஆத்மார்த்தமான ஈடுபாடும் பெரிய அளவில் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.இதற்கு ஊடகங்களும்,இரசிகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்….
செப்டம்பர் 19 ஆம் தேதி அன்று காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக வெளியிடுகிறோம்.இந்தப்படத்தின் தயாரிப்பில் பங்களிப்பு செய்ய ஏன் ஒப்புக்கொண்டேன் என்றால், காடுவெட்டி குரு அப்பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்காகவும் பாடுபட்டவர்.
கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களைப் பார்வையிட்டு வருகிறேன்.அதில் இடம்பெறும் கமெண்ட்டுகள் மோசமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.ஏனிந்த சாதிய வன்மம் எனப் புரியவில்லை என்றார்.
தயாரிப்பாளர் குறளமுதன் பேசுகையில்….
நான் அடிப்படையில் ஒரு சிவில் இன்ஜினியர்.எனக்கும்,சினிமாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.இயக்குநர் கௌதமன் என்னைச் சந்தித்து சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்த மாவீரர் காடுவெட்டி குருவைப் பற்றிப் படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் அந்தக்கதையைச் சொல்லும்போது நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம்.அதன்பிறகு இதனை எப்படி தயாரிப்பது என திட்டமிட்டோம். இந்த படைப்பு மிகப்பெரும் வரலாறாக இருக்க வேண்டும் என்றும்,மண்ணைக் காக்கவும் பெண்ணைக் காக்கவும் குருவைப் போன்ற ஒரு தலைவர் இருந்தார் என்பதைப் பதிவு செய்வதற்காகவும் இதை உருவாக்கத் தீர்மானித்தோம்.இதனால் திரள் நிதி (கிரவுட் ஃபண்டிங்) முறையில் இப்படத்திற்காக நிதி திரட்டத் தொடங்கினோம்.
நாங்கள் வட தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் விகே சூப்பர் ஸ்டோர் என்ற பெயரில் வணிகத்தை நடத்திவருகிறோம்.இதன் உரிமையாளரான நீலமேகம் இதற்கு முழுமையான ஆதரவை வழங்கினார்.கிட்டத்தட்ட ஆறுகோடி ரூபாய் அளவில் இப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டோம்.அத்துடன் இந்தப்படத்தில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.மிகப்பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது.இதனால் திட்டமிட்டதை விட பட்ஜெட் அதிகமானது.இந்நிலையில் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி எங்களுடன் இணைந்தார்.அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சரவணன் ராஜும் ஆதரவு தெரிவித்தார்.
இந்தப்படத்தை ஒதுக்கிட வேண்டாம்.அனைவரும் இந்தப்படத்தைப் பாருங்கள்.தமிழகத்தில் உள்ள இருபெரும் சமூகங்கள் ஒன்றிணைந்தால் தமிழகம் வளர்ச்சி அடையும்.இதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்குநர் கௌதமன் இயக்கியிருக்கிறார்.மூன்றாண்டுகள் தவமிருந்து இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார்.எந்தப் பாகுபாடும் பார்க்காமல் இந்தப்படத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் உமாதேவன் பேசுகையில்….
படையாண்ட மாவீரா என்ற எங்களது முதல் குழந்தையை நாங்கள் பிரசவித்திருக்கிறோம்.இப்படத்தைப் பற்றி இயக்குநர் கௌதமன் எங்களிடம் விவாதித்தபோது எங்களால் முடியுமா? என்ற சந்தேகம்தான் எழுந்தது.
இன்று நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் பொருளாதாரம் தான் முக்கியம்.கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் போல பொருளாதாரமும் முக்கியமாகிறது.இதன் அடிப்படையில் வி கே வணிக குழுமம் இப்படத்தின் தயாரிப்பில் தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறது.இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த மக்கள் தலைவரின் வரலாற்றை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்தப்படத்தை உருவாக்கினோம்.
இப்படத்தின் பாடல்களுக்காக முதன்முதலாக கவிப்பேரரசு வைரமுத்துவைச் சந்தித்தபோது எங்களுக்குத் தெரியாத, எங்கள் சமுதாயம் கண்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் சொல்லி, அந்தச் சமுதாயத்தை உயர்த்துகின்ற பாடல்களை எழுதித்தருகிறேன் என்று சொன்னார்.இதை இங்கு சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இரு பெரும் சமுதாயங்களாகப் பிரிந்துகிடக்கும் தமிழகத்தில், இவர்கள் தமிழ்ச்சமுதாயமாக ஒன்றிணைய வேண்டும். இந்த நோக்கத்துடன் தான் வ.கௌதமன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.இதனால் இந்தப்படத்தை வெற்றிபெறச் செய்யவேண்டியது உங்களின் பொன்னான கடமை என்றார்.
தயாரிப்பாளர் அய்யனார் கண்ணன் பேசுகையில்…..
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்.தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்.அத்தகைய மாமனிதனாக வாழ்ந்து மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை, இந்த தமிழ்ச்சமுதாயத்தில் பின் தங்கியிருக்கிற மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அத்தனை சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டுகளை, நல்ல செயல்களை இப்படம் பேசுகிறது.இப்படத்தை அவருடன் இணைந்து பயணித்த இயக்குநர் வ.கௌதமன் உருவாக்கியிருக்கிறார்.இது மிகப்பெரிய கூட்டுமுயற்சி.நல்லசினிமாவை தயாரிப்பதற்கு பெரும்பான்மையான நேரத்தில் தயாரிப்பாளர்கள் முன் வரமாட்டார்கள்.சினிமாவிற்கு சம்பந்தமில்லாத வேறு துறைகளில் உழைப்பால் முன்னேறியவர்கள் இப்படத்திற்கு உறுதுணையாக நின்றார்கள்.இந்தப்படத் தயாரிப்பில் மாணவ மாணவிகள் உட்பட பலரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்.ஏன் இவ்வளவு மெனக்கடல் என்றால், சமூகநீதிக்காகக் குரல் கொடுத்த ஒரு தலைவரை, அனைத்துச் சமுதாயத்திற்கும் தலைவராக திகழ்ந்தவரின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடத்தில் எடுத்து சொல்லப்படவேண்டும் என்பதற்காகத்தான்.
குடிதாங்கி எனும் ஊரில் தாழ்த்தப்பட்டவரின் சடலத்தை ஒரு வீதி வழியாக எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.அந்தத்தருணத்தில் மருத்துவர் ஐயாவின் கட்டளையை ஏற்று காடுவெட்டிகுரு அவர்கள் அந்தச் சடலத்தை தனது தோளில் சுமந்து அந்த வீதி வழியாகச் சென்றார். அதனால்தான் அவரை மக்கள் மாவீரன் என்று போற்றுகிறார்கள்.அத்துடன் அந்த கிராமப்பகுதிகளில் நடைமுறையில் இருந்த இரட்டைக்குவளை முறையையும் ஒழித்துக்கட்டினார் காடுவெட்டி குரு.அந்தவகையில் சமூகநீதிக்காக பாடுபட்ட ஒரு தலைவராகத்தான் காடுவெட்டி குரு திகழ்கிறார்.
இப்படத்தில் இடம்பெறும் பாடல்களும், படமும் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு தர வேண்டும். மக்கள் தலைவராக மறைந்த காடுவெட்டி குருவை நாம் கொண்டாட வேண்டும் என்றார்.
தயாரிப்பாளர் ‘கிரியாடெக்’ பாஸ்கர் பேசுகையில்….
இயக்குநர் கௌதமனை 2021 ஆம் ஆண்டில் சென்னையில் உணவகம் ஒன்றில் சந்தித்தபோது காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க வேண்டும் என தனது படைப்பைப் பற்றிப் பேசினார்.அப்போது, நான் தொழில் முனைவோராகவும், கல்வியாளராகவும் இருந்தேன்.
அப்போது தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து மறைக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் பற்றிய ஆய்வினை சமர்ப்பிக்கலாம் என்ற ஒரு செய்தி கிடைத்தது.சுதந்திர போராட்டக் காலத்தைக் கடந்து சமகாலத்தில் மக்களுக்காகப் பணியாற்றிய ஏராளமான அரசியல் தலைவர்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையைக் கண்டறிந்தோம்.இவரைப் போன்ற மக்களுக்காக பாடுபட்ட அரசியல் தலைவர்கள் அனைத்துச் சமூகங்களிலும் இருப்பதையும் கண்டறிந்தோம்.இப்படிப்பட்ட தலைவர்களைப் பற்றி மக்களிடத்தில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படத்தை உருவாக்கினோம்.
அரசியல்வாதி என்றால் பகட்டு அரசியல் செய்கிற அரசியல்வாதியாகத்தான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தலைவர்கள் எளிமையாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
2023 ஆம் ஆண்டில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது.கடும் போராட்டத்திற்குப் பிறகு தற்போது இப்படம் வெளியாகிறது. இந்தப்படம் வாழ்வியலைப் பேசுகிறது. ஒரு சாமானிய மனிதன் எந்த நிலைக்கு உயரலாம், எப்போது உயரலாம், எப்போது மக்களால் போற்றப்படலாம் என்றால் அவர் மக்களுக்காக சுயநலமில்லாமல் சிந்தித்து களத்தில் இறங்கி போராடும்போதுதான்.
இந்தப்படத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டேன். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது எதற்காக சினிமா, உங்கள் துறை இதுவல்லவே எனக்கேட்டனர்.அவர்களிடம் ஒருவரைப் பற்றி அரசியல் காரணங்களால் தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவரைப்பற்றிய நிஜமான முகத்தை – எல்லா மக்களையும் நேசித்த ஒரு தலைவரைப்பற்றி- மக்களிடத்தில் சொல்லவேண்டியது எங்களது கடமை.ஒரு குடிமகனாக எங்களுடைய பொறுப்பு என்றும் எடுத்துரைத்தேன்.அத்துடன் மறைக்கப்பட்ட காடுவெட்டி குரு போன்ற மக்கள் தலைவர்களைப் பற்றிய வரலாற்றை அடுத்த தலைமுறைக்குச் சொல்லவேண்டும் என்பதற்காகவும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
இந்தப்படம் ஆபாசம் இல்லாமல், வன்முறை இல்லாமல் உருவாகி இருக்கிறது.அதனால் இப்படம் குடும்பத்தினருடனும் பெண் பிள்ளைகளுடனும் திரையரங்கத்திற்குச் சென்று பார்க்கும் வகையில் தயாராகி இருக்கிறது என்றார்.
கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில்…..
கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர்.சமரசம் இல்லாத போராளி.கலைத்துறையில் தமிழ்இன உணர்வோடும்,மொழி உணர்வோடும் இயங்குகிற சிலரில் இவரும் ஒருவர்.அவர் என் இளையதம்பி எனக் கொண்டாடுவேன்.எனவே கௌதமன் இயக்கியிருக்கும் படைப்பு வெற்றி பெறவேண்டும்.அவருடைய படைப்பு மக்களால் கொண்டாடப்படவேண்டும் என வாழ்த்துவதற்காக வருகை தந்திருக்கிறேன்.
இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் நோக்கும்,போக்கும் துன்பப்படுகிற நிலையில்தான் இருக்கிறது.இன்றைக்கு 200 திரைப்படங்கள் வெளியானால் அதில் 10 படங்கள்தான் வெற்றிக்கு அருகில் வருகின்றன என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
படையாண்ட மாவீரா படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது.நம்மிடம் மிகப்பெரும் நடிகர்கள் இருக்கிறார்கள்,மிகப்பெரும் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள்,இருக்கிறார்கள்,மிகப்பெரிய ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள்,மிகப்பெரிய தொழில் நுட்ப வல்லுநர்கள் இருக்கிறார்கள்.ஆசியாவின் சிறந்த திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன.இவ்வளவு இருந்தும் தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்றால்,இவர்கள் வாழ்க்கையைப் பார்த்து படம் எடுக்காமல் படத்தைப் பார்த்து படம் எடுக்கிறார்கள்.படம் என்பது பிம்பம்.வாழ்க்கை என்பது நிஜம்.இரத்தமும்,கண்ணீரும்,வியர்வையும் கலந்த ஒரு உண்மையான பிம்பம்.அந்த வாழ்க்கையில் இருந்து கடந்து சென்ற வாழ்க்கை,தொட்ட வாழ்க்கை,துன்புற்ற வாழ்க்கை,துன்பப்படுத்திய வாழ்க்கை,சக மனிதனை துன்புறுத்தி சென்ற வாழ்க்கை இவற்றை நீ படமாக எடுத்தால்.. பார்வையாளர்களுக்கும், படைப்புக்கும் ஒரு தொடர்புத்தன்மை ஏற்பட்டிருக்கும். இந்த தொடர்பு தன்மையற்று போனதால் பல திரைப்படங்கள் இரசிகர்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போயின என நான் நினைக்கிறேன்.
எட்டுகோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்த தமிழகத்தில் சினிமாவை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 35 இலட்சமாக சுருங்கி விட்டது. இதற்குக் காரணம் என்ன என்று பார்த்தோமானால் சினிமா தொழில்நுட்பத்தால் துண்டாடப்பட்டுவிட்டது. தொழில்நுட்பத்தால் வளர்ந்த சினிமா, இன்று அதே தொழில்நுட்பத்தால் பின்னடைவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.இதை வருந்தத்தக்கதாகவே கருதுகிறேன்.
அதிலும் தமிழ் சினிமாவில், கதாசிரியன் என்று ஒருவர் இருந்தார்,அவரைக் கொன்றது யார்? திரைக்கதை ஆசிரியர் என்று ஒருவர் இருந்தார்,அவரை அழித்தது யார்? வசனகர்த்தா என்று ஒருவர் இருந்தார்,அவரை மழித்து வழித்தெடுத்தது யார்?
மகாபாரதத்தை நூறு பேர் எடுத்தால்,அதை சரியாக எடுத்தால் வெற்றி.இராமாயணத்தை நூறு பேர் எடுத்தால்,அதைச் சரியாக எடுத்தால் வெற்றி.இந்த இரண்டு இதிகாசங்களின் கதையும் மக்களுக்குத் தெரிந்ததுதான்.
படையாண்ட மாவீரா படத்தைப் பொறுத்தவரை இது வாழ்க்கை,இரத்தம்,கண்ணீர்,வியர்வை என ஒரு உண்மையான போராளியின் போராட்டக் கதையாக இருப்பதால், இதில் கற்பனைகளுக்கு இடமில்லை. விதண்டாவாதங்களுக்கு இடமில்லை. இதில் இருக்கும் நிஜம் படத்தின் பலம் மட்டுமல்ல, வெற்றி பெறுவதற்கான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப்படத்தைக் காணவரும் இரசிகர்களைப் பொறுத்தது.தமிழர்களைப் பொறுத்தது என நான் கருதுகிறேன்.
மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், சந்தனக் காட்டு வீரப்பன் போன்ற வாழ்ந்த வீரர்களின் அசகாய சூரத்தனத்தை மக்கள் கொண்டாடுவார்கள்,இரசிப்பார்கள்.அந்தவரிசையில் இந்த படையாண்ட மாவீரா படத்தையும் மக்கள் இரசிப்பார்கள். கொண்டாடுவார்கள் என நம்புகிறேன் என்றார்.
நடிகர் ஏகன் பேசுகையில்…..
என்னுடைய இனிய நண்பரான தமிழ் கௌதமன் இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அதிரடி சண்டைக்காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.அவன் மென்மேலும் வளரவேண்டும் என வாழ்த்துகிறேன்.இந்தப் படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் தமிழ் கௌதமன் பேசுகையில்…..
இது என்னுடைய முதல்படம்.முதல்படத்திலேயே சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறேன். செப்டம்பர் 19 ஆம் தேதியன்று படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில்….
இப்படத்தின் திரைக்கதையை முதலில் கௌதமன் என்னிடம் கொடுத்தார்.தமிழ்த்தேசிய அரசியல் குறித்த பயணத்தைத் தொடங்கும்போது அண்ணன் கௌதமன் உள்ளிட்ட பலர் எனக்கு அறிமுகமானார்கள்.எந்தவித பிரதிபலனும் இல்லாமல் தமிழக மக்களின் நலன்களுக்காக கௌதமன் களத்தில் இறங்கிப் போராடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்தப்படத்தின் திரைக்கதையைக் கொடுத்தவுடன் என் நிறுவனத்தின் கொள்கையை அவரிடம் தெரிவித்தேன்.அதாவது எந்த சாதியைப் பற்றிய படத்தையும் நான் தயாரிப்பதில்லை என சொன்னேன்.இருந்தாலும் அண்ணன் மீதான அன்பின் காரணமாக அந்த திரைக்கதையை முழுமையாக வாசித்தேன்.நன்றாக இருந்தது.ஆனால் எனக்கு காடுவெட்டி குரு பற்றிய பிம்பம் வேறானதாக இருந்தது.மகாபலிபுரத்தில் அவர் பேசிய காணொலிகள் சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டிருந்தன.அதனைப் பார்த்து நான் அவரை ஒரு சாதித் தலைவராகத்தான் அவதானித்திருந்தேன்.அவரைப் பற்றிய புரிதல் அவ்வாறானதாகவே இருந்தது.
இந்த திரைக்கதையை வாசித்தவுடன் இவர் உண்மையை எழுதி இருக்கிறாரா,அல்லது மிகைப்படுத்தி எழுதி இருக்கிறாரா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள என் நண்பர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.அவர்கள் காடுவெட்டி குருவைப் பற்றி உண்மையான வரலாறைச் சொல்லச்சொல்ல எனக்கு ஆச்சரியமாக இருந்தது.ஆனால் அவரைப்பற்றிய பிம்பம் இங்கு வேறுமாதிரியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதிக்குப் பிறகு தான் நான் தமிழர்கள் என்றால் யார், தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்பது குறித்த அரசியல் ரீதியான புரிதல் ஏற்பட்டது.அன்றிலிருந்து இன்றுவரை மட்டுமல்ல என் வாழ்நாள் முழுவதும் தலைவர் என்றால் அது மேதகு பிரபாகரன் மட்டும்தான்.
காடுவெட்டி குரு பற்றிய வாழ்க்கையைப் படித்ததும் அவரைப் பற்றி எப்படியெல்லாம் தவறாகக் கட்டமைத்திருக்கிறார்கள் என வருத்தப்பட்டேன்.இப்படி தமிழ்ச்சமூகத்தில் மறைக்கப்பட்ட தலைவர்களின் வரலாறு ஏராளமாக இருக்கிறது.
இந்தப்படத்தை நான் பார்த்துவிட்டேன்.இந்தப்படம் சாதியப்படம் அல்ல.காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு.ஒரு மனிதன் நேர்மையாக எப்படி வாழ்ந்திருக்கிறான் என்பதையும்,நேர்மையாக வாழ்ந்ததற்காக அவன் எப்படி வஞ்சிக்கப்பட்டிருக்கிறான் என்பதையும்,தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாத,தன் குடும்பத்திற்கு என்று எதுவும் விட்டுச்செல்லாத,தன் மக்களுக்காகவே வாழ்ந்த தலைவனைப் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.இதையும் கடந்து இப்படத்தில் இடம்பெறும் உரையாடல்களும், பின்னணி இசையும் படத்தின் பலம் என்றே சொல்வேன் என்றார்.
தங்கர்பச்சான் பேசுகையில்…..
வ.கௌதமன் திரைத்துறைக்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை.கௌதமன் தமிழனாக இருப்பதால்தான் சினிமாவை தேர்வு செய்திருக்கிறார்.தமிழர்களுக்கு எதிராக நடக்கிற அரசியலாகட்டும்,அடக்குமுறையாகட்டும்,வன்முறையாகட்டும், மொழிக்கு எதிராக இந்த மண்ணுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்கு எதிராகக் குரல்கொடுக்கும் தமிழன் கௌதமன்.
இந்தநாட்டில் ஒடுக்கப்படுகிறவர்கள் தமிழர்கள்தான்.அழிக்கப்படுவதும்,ஒடுக்கப்படுவதும் தமிழ்மொழிதான்.இதற்கு எதிராகவும் தமிழ்மொழியைப் பாதுகாப்பதற்காகவும் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய மனிதர்கள் நிறையப்பேர் உள்ளனர்.அவர்கள் அனைவரும் இலக்கியங்களாகவும்,எப்போதாவது ஒருமுறை திரைப்படங்களாகவும் வருகிறார்கள்.
தமிழர் அல்லாதவர்கள் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும் அறிந்து கொண்டு தமிழர்களிடையே பாகுபாட்டை,விரோதத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.
சமூகவலைதளங்களில் கமெண்டுகள், ஃபாலோயர்கள் என்ற பெயரில் ஏராளமான மனநோயாளிகள் வலம் வருகிறார்கள்.இவர்கள் அனைவரும் ஒரு அரசியல் கட்சியின் கொத்தடிமைகளாக- கைக்கூலிகளாக இருக்கிறார்கள். இவர்களை வைத்துத்தான் இன்றைக்கு அரசியல் கட்டமைக்கப்படுகிறது.
பத்து முதன்மையான பத்திரிகைகள்,ஐந்து ஊடகங்கள் சொன்ன செய்திகளை மட்டுமே கேட்டு வந்த நமக்கு சமூகவலைதளங்கள் மிகப்பெரிய மாற்றமாகத் தெரிந்தது.ஒவ்வொரு தனிமனிதனும் சமூகவலைதளங்கள் மூலமாக தங்களுடைய கருத்துகளை பதிவிடலாம். பகிர்ந்து கொள்ளலாம் என்ற நிலை உருவானது.இதன்மூலமாக நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தால்,என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.இந்தச்சிக்கலுக்கு இடையேதான் உண்மையான செய்திகள் வெளிவர வேண்டியதிருக்கிறது.
மாவீரன் குருவுடன் நாங்கள் எல்லாம் அரசியல்வாதியாக இல்லாமல் தமிழனாகப் பழகி இருக்கிறோம்.அவர் மிகவும் இளகிய மனம் கொண்டவர்.
1990 களில் இந்தியசினிமாவில் வணிக எல்லைக்குள் நின்றுகொண்டு ஆகச்சிறந்த படைப்பாக வெளியானது மறுமலர்ச்சி.அதில் நான் பணியாற்றிருக்கிறேன்.அது ஒருஊரில் உள்ள தலைவரைப் பற்றிப் பேசும்படம்.அந்தப்படத்தில் தமிழ் மண்ணின் ஒட்டுமொத்த கலாச்சாரமும்,பண்பாடும் இடம் பிடித்திருக்கும்.யாருக்குள்ளும் எந்தப் பகைமையும் இல்லாமல் மனிதர்களையும்,மக்களையும், பெண்களையும்,மதிக்கிற ஒரு தலைவனைப் பற்றிய படம்.இந்தப்படம் யாருடைய மனதையும் காயப்படுத்தவில்லை.ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்குப் பிடித்த மக்கள் தலைவனைப் பற்றி படம் எடுத்தால்,அது சாதிப்படம் என்று குறிப்பிடக்கூடாது. இதை இப்படி வகைப்படுத்துபவர்கள் யார்? என்று தெரியவில்லை.
இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.இந்தப் படத்தைப் பார்த்த பிறகு மக்களிடத்தில் ஒரு தாக்கம் ஏற்படவேண்டும். ஒரு படைப்பு மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.அப்படிப்பட்ட ஒரு படைப்பாக இந்த படையாண்ட மாவீரா இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
இயக்குநர் வ.கௌதமன் பேசுகையில்…..
என்னை வளர்த்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப்படத்திற்கு தயாரிப்பாளரான வி கே குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி.தயாரிப்பில் பங்களிப்பு செய்த கர்நாடகத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கும் நன்றி.இறுதிக்கட்டத்தில் கரம் கொடுத்து ஆதரவு தரும் தயாரிப்பாளர் சரவண ராஜுக்கும் நன்றி.படத்தின் பணிகளின்போது தடங்கல் ஏற்படும் போதெல்லாம் அதனை அகற்ற உதவிய தயாரிப்பாளர் சுந்தரவரதனுக்கும் நன்றி.தொடர்ந்து தோள் கொடுத்து வரும் சகோதரர் கண்ணனுக்கும், சகோதரர் சுரேஷ் காமாட்சி, தங்கர் பச்சானுக்கும் நன்றி.
இவர்களுடன் இப்படத்திற்காக உழைத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த தமிழ்க்குடிகளில் நான் உயிராக நேசிக்கின்ற அத்தனை தமிழ்ச்சமூகங்களும் தங்களின் சுயநலத்தால் வலியையும், அவமானத்தையும் பரிசாக அளித்தன. அந்த வலியையும், வேதனையும் நான் இன்றும் மனதளவில் சுமந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் தமிழ்மண்ணில் பிறந்தவர்கள் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை.தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும் ஒரு தாய்மக்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
இங்கு ஒரு வரலாறை வரலாற்றில் இருந்துதான் தொடங்கவேண்டும். அதற்காக வரலாற்றை மாற்றி எழுதவேண்டும் என்று சொல்லவில்லை.வரலாறாக நின்ற ஒருவனின் வரலாறைச் சொல்லும்போது தான்,இந்தமண்ணில் இருள் மண்டிக் கிடக்கிற குப்பையும், கூளங்களும், அழுக்குகளும் அகற்றப்படும்.அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் ‘படையாண்ட மாவீரா’.
இந்தப்படைப்பை வீழ்த்தவேண்டும் என்பதற்காக மறைமுகமாக பலர் செயல்படுகிறார்கள்.நான் இதுவரை எந்தச் சமூகத்தையும் காயப்படுத்தவில்லை.எந்த இனத்தையும் காயப்படுத்தவில்லை.எந்த தமிழ்ச்சாதியையும் அசிங்கப்படுத்துவதற்காக நான் உடந்தையாக இருந்ததில்லை.பிறகு ஏன் இந்த அருவருப்பான செயலை தொடர்ந்து செய்கிறீர்கள்.
என்னுடைய தந்தையும்,அவருடைய (காடுவெட்டி குரு) தந்தையும் ஒன்றாகக் கல்விகற்றவர்கள்.எனக்கும்,அவருக்கும் நல்லநட்பு மட்டுமல்ல,புரிதல் மட்டுமல்ல,பேரன்பும் இருக்கிறது.அறம் கொண்டவர்களை இந்தமண்ணில் வீழ்த்த முடியாது. வேண்டுமானால் சில காலம் வரை மறைக்கலாம்.ஆனால் மீண்டும் எழுந்து வருவார்கள்.
படைப்புகளையும், படைப்பாளிகளையும் வீழ்த்த நினைத்து மேற்கொள்ளப்படும் செயல்கள் அனைத்தும் அருவருப்பானவை. அதனைத் தவிர்த்துவிடுங்கள்.
தமிழரசனின் வாழ்க்கை வரலாறை படைப்பாக உருவாக்க வேண்டும்.மேதகு பிரபாகரனை வாழ்க்கை வரலாற்றைப் படைப்பாக உருவாக்கவேண்டும்.ஏனெனில் தமிழ் இனத்தின் வரலாறை அனைவருக்கும் உரக்கச் சொல்லவேண்டும்.தமிழினத்தின் எதிரிகளை மண்டியிடச் செய்யவேண்டும்.
இந்தப்படத்தின் பாடல்களில் நெருப்புப் பொறி பறந்தது போல் படத்திலும் அனல் பறக்கும்.இந்தப்படத்திற்காக பின்னணி குரல் கொடுத்த கலைஞர்களுக்கு படத்தின் உச்சகட்டக் காட்சியைத் திரையிட்டுக் காண்பித்தேன். அவர்கள் அனைவரும் கண்ணீருடன் என்னைக் கட்டி அணைத்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.அறம் சுமந்த ஒருவனது வரலாறு என்பது பார்வையாளர்களுக்கு இடைவெளி இல்லாத ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும்,ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்தேன்.அந்தத் தருணத்திலேயே இந்தப்படைப்பிற்கான புனிதத்தை நான் அடையத் தொடங்கிவிட்டேன். இந்தப்படைப்பு வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது
இவ்வாறு அவர் பேசினார்.