17 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறிய சூர்யாவின் ஆசை
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா ஏப்ரல் 29 அன்று சென்னை தாஜ்கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடந்தது.
அந்நிகழ்வில், பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது…..
இந்தக் குழுவில் முதன்முதலாகப் பாடல்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி. செல்வா படைக்கும் பெண் பாத்திரம், விதிக்கப்பட்ட வாழ்க்கையை புறந்தள்ளும் கதாபாத்திரமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். இத்தகைய திரைக்கலைஞர்களோடு எனது பாடல் வந்ததில் மகிழ்ச்சி. யுவனின் இசையில் என்னுடைய பாடல் சேரவேண்டிய இடத்திற்கு சேரும் என்று நம்புகிறேன்.
கார்த்திகிற்கு ‘மெட்ராஸ்‘ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று‘ ஜோதிகாவிற்கு ‘வாடி திமிரா‘, சூர்யாவிற்கு இந்தப் படத்திலும் பாடல்கள் எழுதியிருக்கிறேன். சூர்யா குடும்பத்திற்கு பாடல்கள் எழுதிவிட்டேன் என்கிற நிறைவு இருக்கிறது என்று கூறினார்.
படத்தொகுப்பாளர் பிரவின் பேசும்போது…..
செல்வராகவன் இயக்கத்தில் பணிபுரிய போவதற்கு முதலில் பயமும், தயக்கமும் இருந்தது. ஆனால் அவர் அதை உடைத்துவிட்டார். யுவனின் மேஜிக்கும், செல்வராகவனுடன் கூட்டணியும் நன்றாக வந்திருக்கிறது. பல காட்சிகள் சிரமப்பட்டு தான் எடுத்தோம். படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளைப் பார்த்ததும் கண்ணீர் வடிந்தது. சூர்யாவின் அர்ப்பணிப்பைப் பார்த்து வியந்தேன் என்றார்.
ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் பேசும்போது….
இப்படத்தில் ஒளிப்பதிவு செய்வது பெருமையான விஷயம். செல்வராகவன் இயக்கத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய எழுத்தைப் படிக்கும்போது கடினமான ஒரு சூழ்நிலையில் கேமராவின் கோணம் எப்படி அமைப்பது? என்பதை படித்தபோது ஒரு பலமான படமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். அதேபோல், சூர்யாவும் கடினமான சூழ்நிலையையும் பொருட்படுத்தால் படப்பிடிப்பில் ஈடுகொடுத்து நடித்தார் என்று கூறினார்.
யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது….
செல்வராகவனுடன் பல படங்கள் பணியாற்றியிருக்கிறேன். மேலும், அவர் கதை கூறும்போதே அதன் முக்கியத்துவத்தையும் கூறுவார். ஒவ்வொரு படத்தில் பணியாற்றும்போதும் சிறு சிறு விஷயங்களையும் எப்படி பண்ணலாம் என்று ஆராய்ச்சி செய்வோம். அதேபோல், இப்படத்திலும் பணியாற்றியிருக்கிறோம் என்றார்.
சாய்பல்லவி பேசும்போது….
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் பள்ளி மாணவி போல உணர்ந்தேன். நான் எப்போதும் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பே என்னைத் தயார்படுத்திக் கொண்டு தான் செல்வேன். ஆனால் இப்படத்தில் தயார்படுத்திக் கொள்வது தேவையில்லை என்று உணர்ந்தேன். இப்படத்தில் நான் என்ன பெரிதாக கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் செல்வராகவன் மூலம் நான் நிறையக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நடிகர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிகொண்டு வருவதில் செல்வராகவன் வல்லவர். சூர்யாவுடன் இணைந்து நடித்ததில் அவரிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது…..
இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அனைவருக்கும் இருந்த எதிர்பார்ப்பு இன்றுவரை குறையாமல் இருக்கிறது. அனைவரும் கேட்ட கேள்வி வெளியாக எவ்வளவு காலம் ஆகும் என்று தான். சில காரணங்களால் படம் நினைத்ததைவிட தாமதமாக வருகிறது. தாமதமானாலும் சரியான நேரத்திற்குதான் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் அழைத்த நேரத்தில் எந்த காரணமும் சொல்லாமல் பணியாற்றினார்கள். செல்வராகவன் எழுதிய கதை சிறிதும் மாறாமல் அப்படியே வந்திருக்கிறது. இப்படம் மே மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என்றார்.
இயக்குநர் செல்வராகவன் பேசும்போது…..
இந்தக் கதையின் கதாபாத்திரத்தை வடிவமைக்கும் போதே சூர்யா தான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. நடிப்பில் மட்டுமல்லாமல் டப்பிங்கிலும் சிறு சிறு விஷயங்களைக் கூட கூர்மையாகக் கவனித்துப் பேசுவார். சூர்யா இயக்குநரின் நடிகர். அவர் எனக்குக் கிடைத்தது வரம். சாய்பல்லவி குழந்தைபோல சொல்வதைக் கேட்டு நன்றாக நடித்திருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டு சொல்வதைக் கேட்கும் திறமையான நடிகை என்று கூறினார்.
நடிகர் சூர்யா பேசும்போது……
அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் ரத்தம் சிந்தும் அரசியல், செல்வராகவன் இயக்கத்தில் நடித்தது, ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புதுப் படத்திற்கு செல்வதுபோல இருந்தது.
நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது.
2002 ஆம் ஆண்டு காதல்கொண்டேன் பாடல்கள் கேட்க என்னைக் கூப்ப்ட்டிருந்தார். இரவு தாமதமாகச் சென்றேன். நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்தப்பாடல்களைக் கேட்டு முடித்த நேரத்தில் மின்சாரம் போய்விட்டது. இருட்டிலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தது நினைவு இருக்கிறது. அப்போது உங்களுடன் சேர்ந்து படம் பண்ணவேண்டும் என்று செல்வராகவனிடம் சொன்னேன். 17 ஆண்டுகளுக்குப் பிறகு அது நடந்திருக்கிறது.
செல்வராகவன் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்துப் பார்த்து செல்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.
யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. காரில் பயணம் செய்யும் போது அவரின் பாடல் கேட்டு போனில் தொடர்புகொண்டு உன் கையைக் காட்டு முத்தமிடுகிறேன் என்று கூறியிருக்கிறேன். செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி அன்யோன்மான கணவன் மனைவி போல இருக்கும்.
சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். இதுதவிர, இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
எஸ்.ஆர்.பிரபு காலதாமதமானாலும் இப்படத்திற்கு என்ன தேவையோ அதை தேவைப்படும் நேரத்தில் சரியாக செய்துக் கொடுத்தார்.
என்னுடைய துறையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தின் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். செல்வராகவனுக்கு ஒரு கோரிக்கை, அடுத்த படம் எடுக்கும்போது என்னை வைத்து எடுங்கள் என்றார்.
‘நந்த கோபால குமரன்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். சோனி மியூசிக் சஞ்ஜய் வாத்வான், மோகன்தாஸ், தயாரிப்பாளர் பிரகாஷ் ஆகியோரும் படக்குழுவினரை வாழ்த்தினர்.










