செய்திக் குறிப்புகள்

அர்ஜுன்ரெட்டி நாயகனின் முதல் தமிழ்ப்படம்

கடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்தப் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் அறிமுகமாகும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் தொடக்கவிழா மார்ச் 5,2018 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கலந்துகொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத்து – வைஜெயந்தி மூவீஸ், கே எஸ் ராமாராவ் – கிரியேட்டீவ் கமர்சியல், பி வி என் பிரசாத் – எஸ் வி சி, நவீன் மற்றும் ரவி மைத்ரீ மூவிஸ், ஆகியோர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வம்சி,சந்தீப் ரெட்டி வங்கா, படத்தின் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா, இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன் பிர்ஸாதா, நாசர், சத்யராஜ், எம் எஸ் பாஸ்கர் உட்பட பலர் நடிக்கிறார்கள். இதில் நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா தமிழில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆனந்த் சங்கர். இவர் விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி, விக்ரம் நடித்த இருமுகன் ஆகிய படங்களை இயக்கியவர். இந்தப் படத்திற்கு சாந்தா ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் அவர்களின் வாரிசு, தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படம்.

இந்தப் படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைக்க, கலை இயக்கத்தை கிரண் மேற்கொள்கிறார்.

படத்தில் பணியாற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Related Posts