சினிமா செய்திகள்

நயன்தாரா பட சிக்கல் – 90 இலட்சம் தப்பிக்குமா? தயாரிப்பாளர் தவிப்பு

நிவின்பாலி, சாய்பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் பிரேமம்.அப்படத்துக்குப் பிறகு ஏழாண்டுகள் கழித்து இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் கோல்டு.

மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.அஜ்மல், செம்பன் வினோத் உட்பட பல நடிகர்கள் படத்தில் இருக்கின்றனர்.

ஆனந்த் சி.சந்திரன், விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநாளில் தமிழிலும் இப்படம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

சிம்புவின் மாநாடு படத்தை வெளியிட்ட கோவை சுப்பையா இந்தப்படத்தைத் தமிழில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருந்தார்.அதற்காக அவர் கொடுத்த விலை சுமார் தொண்ணூறு இலட்சம்.

ஆனால், சொன்னபடி ஓணம் பண்டிகை நாளில் அப்படம் வெளியாகவில்லை.

அதன்பின், டிசம்பர் ஒன்றாம் தேதி (இன்று) அப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இன்றும் அந்தப்படம் தமிழில் வெளியாகவில்லை. மலையாளத்தில் மட்டும் வெளியாகிறது. அதற்குக் காரணம் தமிழில் குரல்மாற்றும் வேலைகள் முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் தமிழ் உரிமை வாங்கிய கோவை சுப்பையா வயிற்றில் புளி கரைக்கிறதாம். ஏனெனில், இரண்டு மொழிகளிலும் ஒருசேர வெளியாகும்போது பெரிதாகச் சிக்கல் இராது. ஒரு மொழியில் மட்டும் முதலில் வெளியாகிறது எனும்போது படம் நன்றாக இருக்கிறது என்று வந்துவிட்டால் நல்லது. ஒருவேளை படம் சரியில்லை என்றாகிவிட்டால் இங்கு யாரும் திரையரங்குக்கே வரமாட்டார்கள். போட்ட பணமும் மொத்தமும் போய்விடும்.

இதனால் இன்று கேரளாவில் வெளியாகும் கோல்டு படத்தின் முடிவுக்காகக் கண் துஞ்சாமல் காத்திருக்கிறாராம் கோவைசுப்பையா.

அல்போன்ஸ்புத்திரன், பிருத்விராஜ் ஆகியோர் மட்டுமின்றி நயன்தாராவும் இருப்பதால் நம்பி இவ்வளவு தொகை கொடுத்தவர் நிலைமையை எண்ணினால் பரிதாபமாக இருக்கிறது.

Related Posts