விமர்சனம்

மான்ஸ்டர். – திரைப்பட விமர்சனம்

எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கர் கருணாகரன் சிவ காட்சிகளில் மட்டும் வருகிற வில்லன் அணில்குமார் இந்த நான்கு பேரோடு ஒரு எலியையும் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் முழுநீளப்படம் மான்ஸ்டர்.

படம் தொடங்கியதிலிருந்து கடைசிவரை எல்லாக் காட்சிகளிலும். நீக்கமற நிறைந்திருக்கிற வேடம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு.

அப்பாவியாகப் பெண் பார்க்கப் போவது , பெண் கிடைக்காத சோகம், பெண் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி, சொந்த வீடு வாங்கிய பெருமை, விநோதமான சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிப்பது உள்ளிட்ட நவரசங்களையும் வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள வேடம், கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

அவர் கூடவே வந்து மக்களைச் சிரிக்க வைக்கிற வேலை கருணாகரனுக்கு. வசனங்களில் மட்டுமின்றி பார்வையிலே பல இடங்களில் சிரிக்கவைக்கிறார்.

அளவெடுத்துத் தைத்தது போல அழகான வேடம் பிரியாபவானிசங்கருக்கு. கண்களுக்கும் இதம் நடிப்பிலும் நன்று.

தம்மாத்தூண்டு எலிதானே என்று நினைக்க முடியாதபடி எலியைப் பற்றி பெரும் பயத்தையே உண்டாக்கிவிடுகிறார்கள்.

அந்த எலியும் ஓடி ஓடி உழைத்திருக்கிறது.

கோகுல் பினாயின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவு இருக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில்பாடல்கள் பெரிதாக இல்லையெனினும் பின்னணி இசை படத்துக்கு உயிரூட்டுகிறது. சில இடங்களில் மீட்டருக்கு மேலே இருக்கிறது.

முதல்பாதியில் இருந்த வேகம் இரண்டாம்பாதியில் இல்லை என்பது பெரும்குறை.

நாயகனின் மின்சார வாரிய வேலை நாயகியின் வைர நகைக்கடை வேலை ஆகியனவற்றுக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமன்று எல்லா உயிர்களுக்குமானது என்கிற உயரிய கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.

Related Posts