October 25, 2025
சினிமா செய்திகள்

மகுடம் படத்தின் இயக்குநர் ரவி அரசு நீக்கம் – நட்ட ஈடு எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஷால் நடிப்பில் இவ்வாண்டு ஜனவரியில் வெளியான படம் மதகஜராஜா.அது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம்.அதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான படம் ரத்னம்.2024 ஏப்ரலில் அப்படம் வெளியானது.அதன்பின் அவருக்குப் படம் எதுவும் இல்லை.ரத்னம் படத்துக்குப் பிறகு அவரே இயக்கி நடித்து தயாரிக்கும் துப்பறிவாளன் 2 படத்தைத் தொடங்குவார் என்று சொல்லப்பட்டது.பொருளதாரச் சிக்கல் காரணமாக அந்தப்படம் தொடங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் ஜூலை 14 அன்று விஷால் நடிக்கும் புதியபடம் தொடங்கப்பட்டது.

விஷால் நடிக்கும் 35 ஆவது படமாக இத்திரைப்படம் தயாராகிறது. இப்படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவாகிறது.அறிவிக்கும்போது சூப்பர்குட் ஃபிலிம்ஸ் மட்டும் என்று மட்டும் இருந்த இப்படத்தில் விஷாலின் சொந்தப்பட நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும் இணைந்திருக்கிறது.

இயக்குநர் ரவி அரசு இயக்கும் இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.தம்பி ராமையா, அர்ஜெய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.படத்தொகுப்பை என்.பி.ஶ்ரீகாந்த் கவனிக்க துரைராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.இந்தப்படத்தின் மூலம் மார்க் ஆண்டனி வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஷால் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’. அதன் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே, அப்படத்தினை விஷாலே இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புத் தளத்தில் விஷால் இயக்கும் காட்சிகள் வெளியானது.

இந்நிலையில் தீபாவளி நாளில், விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

இந்த சிறப்பான நாளில், எனது புதிய படமான ’மகுடம்’ படத்தின் 2 ஆவது போஸ்டர் தீபாவளி வாழ்த்துகளுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு படப்பிடிப்பு தொடங்கிய ஆரம்பகட்டத்திலேயே எடுத்திருந்த ஒரு முக்கியமான முடிவை இப்போது நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.

’மகுடம்’ எனும் திரைப்படம் எனது திரையுலகப் பயணத்தில் நான் இயக்குநராக எடுக்கும் முதல் முயற்சி. இப்படி ஒரு சூழ்நிலையை நான் எப்போதும் எதிர்பார்த்தது இல்லை. ஆனால், சில நேரங்களில் சூழ்நிலை நம்மை மிகப் பொறுப்புடனும், என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் என் தயாரிப்பாளர்கள் என் மீது கொண்ட நம்பிக்கையும் இப்படி ஒரு முடிவை எடுக்க வைக்கின்றன. இந்த முடிவும் அவ்வாறே. இது ஒரு கட்டாய முடிவு அல்ல, பொறுப்புணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு.

ஒரு நடிகராக நான் எப்போதுமே நம்புவது திரையுலகையும், என் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்ட உங்களையும், என்னை நம்பும் தயாரிப்பாளர்களையும்தான். அந்த நம்பிக்கையைக் காக்கும் பொறுப்பு எனக்கு உண்டு. அதனால்தான் இப்போது நான் இயக்குநராக பொறுப்பேற்று இருக்கிறேன். அதே உணர்வுடன் இந்த தீபாவளிக்கான என் முடிவும் ஒரு புதிய ஒளியான துவக்கம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?

மகுடம் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே இயக்குநருக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம்.அதற்கு ரவி அரசுவின் உதவி இயக்குநர்கள்தாம் காரணம் எனச்சொல்லி உதவி இயக்குநர்களாக இருந்த 7 பேரில் நான்கு பேரை நீக்கியிருக்கிறார்கள்.அதன்பின் விஷால் பரிந்துரைத்த நான்கு பேரை உதவி இயக்குநர்களாகச் சேர்த்திருக்கிறார்கள்.

அதன்பின்னும் சுமுக நிலை ஏற்படவில்லையாம்.இதனால், ரவி அரசுவை இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு தாமே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முடிவை விஷால் எடுத்திருக்கிறார்.

கதாநாயகனா? இயக்குநரா? என்கிற கேள்வி வந்தால் கதாநாயகன் பக்கம்தான் தயாரிப்புத் தரப்பும் நிற்கும் எனும் எதார்த்தத்துக்கேற்ப தயாரிப்பு நிறுவனமும் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

அதன்பின் தாமே இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் விஷால்.

இதற்காக, ரவி அரசுக்கு என்ன நட்ட ஈடு கொடுக்கப்பட்டது?

ரவி அரசு இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் மகுடம் படத்தின் கதை அவருடையதுதான்.இதனால் சுமார் நான்கு கோடி கொடுத்தால் விலகிக் கொள்வதாக ரவி அரசு சொல்லியிருக்கிறார்.அது அதிகம் என்று எல்லோரும் கருதியதால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் இரண்டரை கோடியை அவருக்கு நட்ட ஈடாகக் கொடுத்து அவரை விலக்கியிருக்கிறார்கள்.

இதற்கு முன்னதாக,இப்படத்தை எழுதி இயக்குவதற்காக அவருக்குப் பேசப்பட்டிருந்த சம்பளம் சுமார் ஒன்றரை கோடி என்று சொல்லப்படுகிறது.அவர் முழுமையாக வேலை பார்த்திருந்தால்கூட அதுதான் கிடைத்திருக்கும்.இடையில் நீக்கியதால் அவருக்கு வேலை பார்க்காமலே ஒரு கோடி அதிகமாகக் கிடைத்துவிட்டது என்கிறார்கள்.

Related Posts