மார்கன் – திரைப்பட விமர்சனம்

நாட்டில் நடக்கும் மர்மக் கொலைகள் அதை விசாரிக்கும் காவல்துறை என்கிற வழக்கமான அடிப்படைக் கதைக்களத்தை வைத்துக் கொண்டு திரைக்கதையில் பல வியப்புகளைக் கொடுத்திருக்கும் படம் மார்கன்.
உடலெல்லாம் கறுத்துப்போய் மர்மமான முறையில் மரணிக்கிறார் ஒரு பெண்.சென்னையில் நடக்கும் இதைப் போன்றே மும்பையிலும் நடக்கிறது.இதனால் நாடு முழுதும் பரபரப்பாகிறது.இதனால் மும்பையில் இருந்து சென்னை வருகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனி.அவருடைய விசாரணையில் ஒருவரைப் பிடிக்கிறார்.அவர்தான் கொலையாளி என்று நினைத்தால் இல்லை என்றாகிறது. அதன்பின் உண்மையான குற்றவாளியைப் பிடித்தார்களா? எப்படிப் பிடித்தார்கள்? என்பதை விளக்குவதுதான் திரைக்கதை.
வழக்கமான விஜய் ஆண்டனி என்கிற சொல் வந்துவிடக் கூடாது என்பதற்காக மெனக்கெட்டு, ஒருபக்கம் முகம் கை எல்லாம் கறுத்துப்போனவராக வருகிறார் விஜய் ஆண்டனி.மையக் கதையைப் பிரதிபலிக்கும் தோற்றம் என்பதால் கதைக்குள் ஒன்றவும் அந்தத் தோற்றம் உதவுகிறது.விசாரணை அதிகாரிக்குரிய மிடுக்குடன் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அஜய் திஷானுக்கு இது முதல்படம். ஆனால் அப்படித் தோன்றாத அளவு வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார். அவரிடம் இருக்கும் அதீத சக்திகள் அவை தொடர்பான காட்சிகள் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.
காவல்துறை வேடமேற்றிருக்கும் பிரிகிடா கவனம் ஈர்க்கிறார்.அஜய் திஷானுக்கு இணையராக வரும் தீப்ஷிகா, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் வெண்ணிலா ஆகியோரும் நன்று.
வினோத் சாகர், நடராஜ், அருண் ராகவ், கதிர், ராஜாராம், அபிஷேக், நிஹாரிகா மற்றும் சில காட்சிகளில் மட்டும் வருகிற சமுத்திரக்கனி ஆகியோர் பொருத்தம்.
எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கதைக்களத்துக்குப் பலம் சேர்க்கும் வண்ணம் ஒளியமைப்பு செய்திருப்பது காட்சிகளுக்கு அழகு சேர்த்திருக்கிறது.
விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார்.அவருடைய் ஈடுபாடு பின்னணி இசையில் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது.
இயக்கியிருக்கும் லியோ ஜான்பால் அடிப்படையில் படத்தொகுப்பாளர் என்பதால் காட்சிகளை நறுக்குத் தெறித்தாற்போல் வைத்திருக்கிறார்.
அறிவியல் ஆன்மீகம் ஆகியனவற்றை வைத்து மாறுபட்ட திரைக்கதையை வைத்திருப்பதோடு கடைசிவரை படத்தை விறுவிறுப்பாகக் கொண்டுபோயிருக்கிறார்.
சிற்சில குழப்பங்கள் தொய்வுகள் ஆகியன இருந்தாலும் அவற்றைத் தாண்டி படத்தை இரசிக்க வைத்திருக்கிறது விஜய் ஆண்டனியின் உழைப்பு.
இந்தப் படத்தில் ஆமை மற்றும் ஆந்தை முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. பொதுவாக ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என ஊரில் பழமொழி சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆமையும் ஒரு உயிர்தான். அதேபோல் அமீனாவும் ஒரு மனிதர் தான் எனவே நெகட்டிவ்வாக பார்க்காமல், பாசிட்டிவாக பார்த்தால் எல்லாம் நன்மையாக முடியும் என்றார் விஜய் ஆண்டனி.
அது நடந்திருக்கிறது.
– கதிரோன்