எல் ஐ கே தீபாவளி வெளியீடு – ட்யூட் என்னாச்சு?
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்யூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று திடீரென இன்னொரு அறிவிப்பு வந்தது.அதில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘எல்.ஐ.கே’. லலித்குமார் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகிவரும் இந்தப்படம் தீபாவளியையொட்டி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் படமும் எல்ஐகே படமும் ஒரேநாளில் வெளியாவது சாத்தியமில்லை.
அதனால் ட்யூட் தள்ளிப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.
ஏன் இந்த மாற்றம்? என்ன நடந்தது?
இப்போதெல்லாம் திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியை அப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமையைப் பெறும் இணைய நிறுவனங்களே தீர்மானிக்கின்றன.இம்முறை தீபாவளி வெளியீடு என்று சொல்லப்பட்ட பைசன், டியூட் ஆகிய இரண்டு படங்களையும் ஒரேநிறுவனம் வாங்கியிருக்கிறது. அப்படங்கள் இரண்டும் ஒரேநாளில் வெளியானால் அதேபோல் ஒரேநாளில் இரண்டு படங்களையும் டிஜிட்டலில் வெளியிட முடியாது என்கிற நிலை.அதனால் ஏதாவது ஒரு படத்தைத் தள்ளிப் போகச் சொல்லி அப்படங்களை வாங்கியிருக்கும் இணையதள நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள்.
இரண்டு படங்களுமே தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் வண்ணம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, தீபாவளி விடுமுறையில் வெளியாகிறது என்பதால் இயல்பை விடச் சற்றுக் கூடுதல் விலை கொடுத்து வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் முன் வந்திருக்கிறார்கள்.
தீபாவளி ரிலீஸ் இல்லையென்றால் விலை குறைவது மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் வெளியிட உகந்த தேதி கிடைப்பது சிக்கலாகிவிடும் என்று இரண்டு படக்குழுக்களுமே டிஜிட்டல் நிறுவனத்திடம் முறையிட்டிருக்கின்றன.
பலமுறை பேசிய பின்பு டிஜிட்டல் நிறுவனம் அதை ஒப்புக்கொண்டது என்றும் இரண்டு படங்களும் வெளியாகட்டும்,திரையரங்குகளில் எது நன்றாக ஓடுகிறதோ? அதை இரண்டாவதாகவும், வரவேற்பு குறைவாக இருக்கும் படத்தை முதலிலும் வெளியிட்டுக் கொள்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்களீன் இந்தக் கோரிக்கையை இணையதள நிறுவனம் ஏற்றுக்கொண்டது.இருபடங்களும் சொன்னபடி வெளியாகிவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில்தான்,எல் ஐ கே தீபாவளி வெளியீடு என்று அறிவிப்பு வந்திருக்கிறது.
இணையதள நிறுவனம் ஒப்புக்கொண்ட போதும், ட்யூட் படத்தை வெளியிடவியலாத நிலை ஏற்பட்டுவிட்டதாம்.ஏனெனில் அந்தப்படத்தைத் தயாரிப்பது தெலுங்குப்பட நிறுவனம்.தெலுங்குத் திரையுலகில் திடீரென வேலைநிறுத்தம் வந்துவிட்டதால் அதை மீறி ட்யூட் படத்தின் வேலைகளை முடிக்கமுடியாது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டதாம்.
அதனால் தீபாவளி வெளியீட்டுக்குத் தக்க படம் தயாராகாது எனும் நிலை.இதைத் தெரிந்தவுடன் வேக வேகமாக எல் ஐ கே படத்தின் வெளியீட்டுத் தேதியை தீபாவளி என்று அறிவித்திருக்கிறார்கள்.











