விமர்சனம்

லிஃப்ட் – திரைப்பட விமர்சனம்

படம் தொடங்கியதும் ஒரு மரணம். 

அதன்பின் ஒரு பெரிய  நிறுவனத்தில் குழுத்தலைவராகப் பொறுப்பேற்கிறார் கவின். 

முதல்நாளிலேயே இரவு பத்துமணிக்கு மேல் வேலை செய்யவேண்டிய சூழல். வேலை முடித்து வீட்டுக்குக் கிளம்பினால், அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை என்றால் எப்படி இருக்கும்?

பாதி நேரம் அவர் மட்டும் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுகிறார், அதன்பின் அவருடன் நாயகி அம்ரிதாவும் சேர்ந்து மாட்டிக் கொள்கிறார்.

இருவரும் தப்பித்தார்களா? ஏன் அப்படியெல்லாம் நடந்தது? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் படம்.

தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு (ப்ராஜெக்ட்) திட்டத்தின் குழுத்தலைவர் (டீம் லீடர்) வேலைக்கென பிறந்தது போல் பொருத்தமாக இருக்கிறார் கவின். பேய் இருக்கிறது எனத் தெரிந்ததும் நன்றாகவே பயப்படுகிறார்.

அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்று நாம் வருந்தும் நேரத்தில் நாயகி அம்ரிதாவையும் கொண்டு வந்து விடுகிறார்கள். அவரும் அழகாகப் பயப்பட்டு பார்ப்போருக்கு ஆறுதல் தருகிறார்.

நிறுவனத்தின் துணைத்தலைவர், உடன் பணிபுரிபவர்கள் இரண்டு பேர், ப்ளாஷ்பேக் எனப்படும் சொல்லுங்கதையில் இரண்டு பேர் காவல்காரர்கள் இருவர் ஆகிய பலரும் இருபது நிமிடங்களுக்குள் வந்து போய்விடுகிறார்கள்.

எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு, பிரிட்டோ மைக்கேலின் பின்னணி இசை, தபஸ் நாயக்கின் ஒலிக்கலவை, என் எஸ் பி. மாதவனின் கலை இயக்கம், ஜி.மதனின் படத் தொகுப்பு ஆகிய அனைத்தும் இயக்குநரின் எண்ணத்துக்கு இசைந்திருக்கின்றன.

வெகுமக்களுக்குப் பரிச்சயமில்லாத ஒரு துறை சம்பந்தப்பட்ட கதையை எடுத்துக் கொண்டு திகில் வடிவத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் வினீத்வரபிரசாத். ஒரே காட்சி படம் நெடுக வருவது போல் இருப்பது பெரும் பலவீனம்.

ஐடி எனப்படும் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுபவர்களைப் பார்த்து, அவனுக்கென்னப்பா< கம்ப்யூட்டர்ல வேலை, கை நிறையக் காசு, கார் வீடுன்னு ஜாலியா இருக்கான் என்று பொறாமைப்படுகிறது உலகம். ஆனால் அவர்கள் வாழ்க்கை நாம் நினைக்கும் அளவுக்கு செழிப்பாக இல்லை என்பதையும் அங்கு எவ்வளவு கொடூரங்கள் நிகழ்கின்றன என்பதையும் நெஞ்சம் பதைக்கப் பதிவு செய்திருப்பதும் கடைசியில் நிறுவனத்தின் துணைத்தலைவரைப் போடா என  விரட்டுவதும் நன்று.

Related Posts