வியாபார முறையை மாற்றிய லியோ – சார்ந்தோர் கடும் அதிர்ச்சி
விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படத்துக்கான திரையரங்க முன்பதிவு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கவில்லை.
அதற்குக் காரணம், இன்னமும் சென்னை செங்கல்பட்டு பகுதிகளில் திரையரங்குகளோடு ஒப்பந்தம் போடப்படவில்லை.
ஏன்?
வழக்கமாக விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் நடக்கும்.
ஆனால், முதன்முறையாக இந்தப்படத்தின் வியாபாரம் டிஸ்டிரிபியூசன் அடிப்படையில் நடந்திருக்கிறது.
மினிமம் கியாரண்டியில் படம் விற்பனை செய்தால் அந்தக் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வசூலாகும் தொகையில் தயாரிப்பாளருக்குப் பாதிதான் வரும் மீதி விநியோகஸ்தருக்குப் போகும்.
டிஸ்டிரிபியூசன் என்றால் வசூலாகும் மொத்தத் தொகையும் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும்.அதில், ஐந்து அல்லது மூன்று விழுக்காடு தரகுத் தொகை விநியோகஸ்தருக்குக் கிடைக்கும்.
அதனால், இந்தப்படத்தின் மொத்த வசூலும் தமக்கே வரவேண்டும் என முடிவு செய்த லியோ படக்குழு எல்லா விநியோகப் பகுதிகளிலும் மினிமம் கியாரண்டி என்று இருந்ததை, டிஸ்டிரிபியூசன் வகைக்கு மாற்றிவிட்டார்களாம்.
அதன்பின், திரையரங்குகளோடு ஒப்பந்தம் போடப்போனால் அங்கும், எங்களுக்கு 75 விழுக்காடு 80 விழுக்காடு பங்கு வேண்டும் என்று கேட்கிறார்களாம். அதனால் திரையரங்குக்காரர்கள் அதிர்ச்சி அடைந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதி வியாபாரத்தில் பல்லடுக்கு திரையரங்குகள் மற்றும் தனித்திரையரங்குகள் ஆகியனவற்றிற்கு தனித்தனியாக வியாபாரம் நடந்திருக்கிறது.
பல்லடுக்குத் திரையரங்குகளில், எல்லாப்படங்களுக்குமே ஐம்பது விழுக்காடுதான் பங்கு தருவார்கள். அவர்களிடமும் எங்களுக்கு அறுபது விழுக்காடு தரவேண்டும் என்று கேட்கிறதாம் லியோ குழு.
இதனால், பிவிஆர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஒப்பந்தம் போடாமல் இருக்கின்றனவாம்.
இந்தக் காரணத்தால்தான் இன்னமும் முன்பதிவு தொடங்கவில்லை.
லியோ படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறதென்பதால் இதுவரை இருந்த வியாபார முறைகளை மாற்றி எல்லாப்பணமும் எங்களுக்கே என்று சொல்கிறது படக்குழு.
இவையெல்லாம் படம் நன்றாக இருந்தால் மட்டுமே நடக்கும். இல்லையெனில் எல்லாமே தலைகீழ்.











