கடலை போட ஒரு பொண்ணு வேணும் – இசை வெளியீட்டுவிழா தொகுப்பு
ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையைக் கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில்,காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக கடலை போட ஒரு பொண்ணு வேணும் என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
ராபின்சன் என்பவர் தயாரித்துள்ள இந்தப்படத்தை இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 27.02.2022 அன்று நடைபெற்றது.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் ராபின்சன் பேசியதாவது…….
ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்பதை இந்தப்படத்தில் தான் தெரிந்து கொண்டேன். நிறையப் பேர் படமெடுத்து ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். இங்கு மேடையில் இருக்கும் பெரியவர்கள் அந்தக் கஷ்டங்களை அறிந்தவர்கள், அவர்கள் இங்கு எங்களை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. எங்கள் குழு மிகக் கடினமாக உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம், அடுத்த படத்தை இன்னும் பெரிதாகச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அடுத்த மாதம் இப்படத்தைத் திரையரங்கில் வெளியிடவுள்ளோம், இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவைத் தந்து எங்களை வாழ்த்தி வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.
அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது……
என்னை இங்கு மேடைக்கு அழைத்த போது நடிகர் நாஞ்சில்சம்பது என்று சொல்லி அழைத்தார்கள்.எனக்குக் கூச்சமாக இருந்தது. நான் நடிகன் அல்ல. தமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவனாக என்னை வளர்த்துக் கொண்டவன். நான் இரண்டு திரைப்படங்களில் தான் நடித்து இருக்கிறேன். இந்தப்படத்திலும் நடித்துள்ளேன். இந்தப்படத்தில் தம்பி அசாரின் நடிப்பும் பாட்டும் உற்சாகம் கொள்ள வைக்கிறது. காட்சிகளைப் பார்க்க பிரமிப்பாக குதூகலம் தருவதாக அமைந்துள்ளது. ஒரு படத்தை எடுத்து வெளியிட கோடிக்கணக்கில் தேவைப்படும் எனும் நிலையை இரசிகர்கள் மாற்றிக்காட்ட வேண்டும், தம்பி அசாரின் நடிப்பில் இப்படம் அதனை மாற்றிக்காட்டும். இந்தப்படம் காதலை நகைச்சுவையுடன் இரசிக்கும்படி சொல்லியிருக்கிறது. கடலை போட பொண்ணு வேணும் படம் பற்றி பேச எனக்குத் தகுதி இல்லை, ஏனெனில் நான் கடலை போட்டதில்லை. காதலுக்குக் கடலை போடுவதைத் தாண்டி நிறைய இருக்கிறது என நம்புபவன் நான். காதல் புனிதமானது, மகத்தானது அதை சமகாலத்தில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் தம்பி ஆனந்த ராஜன் சொல்லியுள்ளார். அனைவரையும் கவரும் படமாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.
தயாரிப்பாளர் கே.இராஜன் பேசியதாவது……
இப்படத்தின் பாடல்கள் பார்த்தேன். ரொம்பவும் அருமையாக இருந்தது. தம்பி அசார் அழகான நடிப்பில் ஈர்க்கிறார். தயாரிப்பாளர் இல்லாமல் சினிமா இல்லை தயாரிப்பாளரை ஏமாற்றாதீர்கள், அனைவரும் இணைந்து ஈகோ இல்லாமல் வேலை பார்த்தால் சினிமா ஒரு அருமையான தொழில், ஆனால் இங்கு அது நடப்பதில்லை. தயாரிப்பாளர் குஞ்சுமோன் வந்துள்ளார் இயக்குநர் ஷங்கரை உருவாக்கியவர், ஆனால் அவர் இப்போது படமெடுப்பது இல்லை, கோடிகளைக் கொட்டும் தயாரிப்பாளர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. தயாரிப்பாளருக்கு லாபம் வந்தால் மீண்டும் படம் தான் எடுப்பார்கள் ஆனால் ஹீரோவுக்கு கொடுக்கும் பணம் என்னவாகிறது?, திரும்ப வருவதே இல்லை. கடலை போட பொண்ணு வேணும் ஆனால் இந்தக் காலத்தில் பெண்ணிடம் கடலை போட்டுட்டு, கடலில் போட்டு விடுகிறீர்களே ? காதல் செய்து ஏமாற்றாதீர்கள். கடினமாக உழைத்து படமெடுத்துள்ளார்கள் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். வாழ்த்துகள்.
தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் பேசியதாவது……
திரைப்பட விழாக்களைப் பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மீண்டும் விழாக்கள் நடப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் பாடல்கள் பார்த்தேன். அருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் நிறையச் செலவு செய்துள்ளார். ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் நிறையப் படங்கள் நான் விநியோகம் செய்திருக்கிறேன். கேரளாவில் பண்ணியிருக்கிறேன், ஒரு படம் எப்படி வியாபாரம் ஆகிறது என்பது தெரியும், மணிரத்னம் உடைய நாயகன் படத்தை முதலில் நான் விநியோகம் செய்ய மாட்டேன் எனச் சொன்னேன், அவரது அண்ணன் ஜீவி நீங்கள் தான் பண்ண வேண்டும் என்றார். அதற்காகப் பண்ணினேன். நாயகன் படம் எனக்கு இலாபம் இல்லை, இங்கு தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை, யாரும் உதவுவதில்லை, மணிரத்னம், ரஜினி யாரும் ஜீவிக்கு கடைசி நேரத்தில் உதவி செய்யவில்லை. இந்த நிலை தான் இங்கு இருக்கிறது, தயாரிப்பாளர் இல்லை என்றால் சினிமா இல்லை. இயக்குநர்கள், நடிகர்கள் இல்லை, தமிழ் மக்கள் தான் என்னை வாழவைத்தார்கள். எனக்கு கமர்ஷியல் படங்கள் தான் பிடிக்கும் இந்தப் படத்தில் நல்ல கமர்ஷியல் அம்சங்கள் இருக்கின்றன. இந்தப்படம் ஜெயிக்க வாழ்த்துகள் நன்றி.
நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது…
கடலை போட ஒரு பொண்ணு வேணும் டைட்டில் நன்றாக இருக்கிறது. இப்படியெல்லாம் டைட்டில் வைத்தால் தான் இளைஞர்கள் சினிமாவுக்கு வருகிறார்கள். நான் ராஜாதிராஜா, குலோத்துங்க சோழன் பட டைட்டில் வைத்த போது, எல்லோரும் திட்டினார்கள் ஆனால் அந்தப்படம் ஜெயித்தது. இப்போதெல்லாம் பெரிய படத்திற்கு தான் கூட்டம் வருகிறது. விஜய் பீஸ்ட்டுக்கு வெயிட் பண்ணுகிறார்கள். அனிரூத் சிவகார்த்திகேயன் கலக்குகிறார்கள். பெரிய படமெடுத்தால் தான் மக்கள் பார்க்க வருகிறார்கள். சின்ன படத்திற்கு வருவதில்லை. மத்திய அரசு மக்களிடம் வரி போட்டு எல்லாவற்றையும் பிடுங்கி விடுகிறது. மக்களிடம் பணமில்லை, மக்கள் சந்தோஷமாக இருந்தால் தானே படத்திற்கு வருவார்கள், விஜய்யை ஷீட்டிங்கிலிருந்து வரி ஏய்ப்பு விசாரணை என கூட்டி போனார்களே அதை யாராவது கேட்டார்களா? நான் மட்டும் தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எல்லோரும் இணைந்து போராட வேண்டும், ஹீரோ ஹீரோயின் நன்றாக நடித்துள்ளார்கள், இந்த கடலை போட பொண்ணு வேண்டும் ஜெயிக்க வாழ்த்துகள்.
இசையமைப்பாளர் ஜிபின் பேசியதாவது……
இந்தப் படத்தில் ஷங்கர் மகாதேவன் ஒரு பாடல் பாடியிருக்கிறார், அதற்காக மும்பை போய் வந்தோம், தயாரிப்பாளர் செலவு பற்றிக் கவலைப்படாமல் நன்றாக வர வேண்டும் என்றார். சங்கர் மகாதேவன் பாடும்போதே இந்தப்பாடல் ஜெயிக்கும் என்றார். இந்தபடத்தில் யுகபாரதி மூன்று பாடல்கள் எழுதியுள்ளார். நான் இரண்டு பாடல் எழுதியுள்ளேன், இந்தப்படத்திற்காக எல்லோரும் கடினமாக உழைத்துள்ளோம். இந்தப்படத்தை கொண்டு வந்ததற்கு ராபின் சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள். டைட்டிலை தப்பாக நினைக்காதீர்கள், காதல் செய்ய பொண்ணு வேணும் என்பது தான் கதை. இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது…….
கடலை போட ஒரு பொண்ணு வேணும் இந்தப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி, ஆனந்த்ராஜ் சாரின் அடுத்த படத்திலும் நடித்திருக்கிறேன், அவர் நிறையப் படங்கள் எடுக்க வேண்டும், அதில் நான் நடிக்க வேண்டும் நன்றி
நடிகர் ராதாரவி பேசியதாவது…..
இந்தப் படத்தின் நாயகன் அசார் டிவியிலிருந்து வந்தவர். உனக்கு உதாரணமாகப் பலரைச் சொல்லுவார்கள். அதை கேட்கக் கூடாது. உனக்கு என்று தனியாகப் பெயர் கிடைக்கும், இந்தப்படத்தின் ஒரிஜினல் டைட்டில் தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன், இந்தப்படம் கண்டிப்பாக வெற்றிபெறும், நாஞ்சில் சம்பத் நான் நடிகன் இல்லை ஆனால் இரண்டு படம் இருக்கு என்றார், ஆனால் இங்கு நடிகனுக்கு படமே இல்லை, உங்களுக்கு படமிருக்கு என்று சந்தோசப்படுங்கள், சினிமாவில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும், அதற்காக தான் நான் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கிறேன். வசதி இலவசமாக வருவது சினிமாவில் தான். தயாரிப்பாளர்களால் தான் சினிமா வாழ்கிறது. இந்தப்படம் பாடல் எல்லாம் அற்புதமாக உள்ளது ஒளிப்பதிவாளர் மிரட்டியிருக்கிறார். நான் ஆறுபடம் எடுத்தேன், கடனாகி விட்டேன். சினிமா வாழ வேண்டுமானால் இந்த மாதிரி சின்ன படங்கள் ஓட வேண்டும். நான் அடுத்ததாக 10 சின்னப் படங்கள் எடுக்கப் போகிறேன். ஒரு நல்ல செய்தி தயாரிப்பாளர்களுக்கும் பெப்சிக்கும் அமைச்சர் முன்னால் ஒப்பந்தம் உருவாகப் போகிறது. அதனால் சினிமா கண்டிப்பாக வளரும், இந்தப்படம் டைட்டிலுக்கே ஓடும் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.
நாயகன் அசார் பேசியதாவது..,
இங்கு பேசுவது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. பிக்பாஸ் மாதிரி குடும்பத்தில் நிறைய சண்டை வரும், ஆனால் கடைசியில் வீடு ஒன்றாக இருக்கும், அதே மாதிரி தான் எங்கள் குடும்பமும், பெரிய படங்களில் நடிக்கும் யோகி பாபு அண்ணன் எங்கள் சின்னப் படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் ஆனந்த் நடித்துக் காட்டுவதைத் தான் இதில் நான் செய்துள்ளேன், அவரது சொந்தக்கதையைப் படமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நிறைய நல்ல அனுபவம் இருக்கிறது., இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் ஆனந்த்ராஜ் பேசியதாவது…
ராபின்சன் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும், நான் மிகக் கஷ்டமான சூழ்நிலையில் இருந்த போது எனக்கு இந்த வாய்ப்பு தந்தார். அவருக்கு நான் டைட்டில் சொன்னவுடனேயே பிடித்துவிட்டது. இப்படம் முழுக்க முழுக்க ஜாலியான படமாக இருக்கும். ஒரு இரவில் நடக்கும் கதை ஒரு காமெடியான டிராவலாக இருக்கும். உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும் ஆதரவு தாருங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.











