கூச முனுசாமி வீரப்பன் – ஆவணப்படத் தொடர் விமர்சனம்

1970 களிலிருந்து செயல்பட்டுவந்த சந்தனக்கடத்தல்காரர் என்று அறியப்பட்ட வீரப்பன்,1980 களில் பெரிதாகப் பேசப்பட்டார். அப்போதிருந்து 2014 ஆம் ஆண்டு கொல்லப்படும் வரை முதன்மைச் செய்திகளில் இருந்தார்.
அதன்பின் அவர் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் என நிறைய வந்துவிட்டன.கடைசியாக வந்தாலும் அவ்வளவையும் தாண்டி நிற்கிறது நக்கீரன்கோபால் தயாரித்துள்ள கூசமுனுசாமிவீரப்பன் எனும் ஆவணப்படத் தொடர்.
அவருடைய வாழ்க்கை குறித்து ஆயிரக்கணக்கான கதைகள் சொல்லப்பட்டன. அவை எல்லாம் பார்த்தவர்கள் சொன்னது கேட்டவர்கள் சொன்னது கேட்டவர்களிடம் கேட்டவர்கள் சொன்னது. ஆனால், இந்தத் தொடர் வீரப்பனே சொன்னது.இது, நக்கீரன் குழுவினர் உயிரைப் பணயம் வைத்து எடுத்த வீரப்பன் காணொலி நேர்காணலை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது.
பத்து முதல் பனிரெண்டுபேர் வரை கொண்ட அந்தக்குழுவைப் பிடிக்க சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படையினர் களமிறங்கினர். அவர்களால் வீரப்பனை நெருங்கமுடியவில்லை. அந்த ஆத்திரத்தை அப்பாவிப்பொதுமக்கள் மேல் காட்டினர். அதனால்,மனித உரிமை ஆர்வலர்கள், சமுதாய அக்கறையாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வீரப்பன் தேடுதல் படையினர் செய்த கொடுமைகளை வெளிக்கொண்டுவந்தனர்.
அவற்றில் முதலிடத்தில் நின்ற நக்கீரன் ஏடு,அந்தக் கொடூரங்களை எழுத்தாகவும் புகைப்படங்களாகவும் வெளியிட்டுவந்தது.அவற்றிற்கு சிகரம் வைத்தது போல் வீரப்பன் காணொலி நேர்காணல் அமைந்தது.
அதில், அவர் உருவான விதம், படிப்படியாக வளர்ந்த நிலை,மூன்று மாநில காவல்துறை, அதிரடிப்படை என ஆயுதந்தாங்கிய படைகளை எதிர்த்த துணிவு ஆகியன குறித்து அவரே பேசியிருக்கிறார்.
ஆறு பாகங்களைக் கொண்ட இந்தத் தொடரில் காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் குறித்து அவர் சொன்னவற்றைக் காட்சிகளாகச் சித்தரித்திருக்கிறார்கள்.மக்களால் பெரிதாகப் பேசப்பட்ட அந்த வீரசாகசங்களைத் தாண்டி அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டு இன்றளவும் அதற்கு நிவாரணம் கிடைக்காத மக்களின் தோற்றமும் வாக்குமூலமும் நெஞ்சை உறையவைக்கின்றன.
இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர் கோபால், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,இந்து என்.ராம், வழக்கறிஞர் ப.பா.மோகன், செய்தியாளர்கள் சுப்பு என்ற சுப்ரமணியன், ஜீவா தங்கவேல், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி,சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி,ஜெயப்பிரகாஷ், வீரப்பன் மகள் உள்ளிட்டோர் வீரப்பனைப் பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர்.
வீரப்பனின் தொடக்கக் காலத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்தத் தொடர், 2000 ஆம் ஆண்டு கன்னட நடிகர் இராஜ்குமார் கடத்தப்படுவதோடு நிறைவடைகிறது. அதன் விரிவாக்கம் மற்றும் அதற்குப் பிறகான நிகழ்வுகள் இரண்டாம்பாகத்தில் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இவை அனைத்தும் வரிசைக்கிரமமாகவும் நேர்த்தியாகவும் தொகுக்கப்பட்டிக்கின்றன. ஆவணப்படம் என்றாலே அயர்ச்சியாக இருக்கும் எனும் நிலையை மாற்றி அடுத்து என்ன வரும்? என்று எதிர்பார்க்கும் விதமாகத் தொகுத்திருக்கிறார் ராம்பாண்டியன்.
இசையமைத்துள்ள சதீஷ், காட்சிகளில் உள்ள உணர்வுகளை பின்னணி இசைமூலம் உயர்த்திக்காட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ராஜ், உண்மைக்காட்சிகளுக்கு நிகராகச் சித்தரிப்புக் காட்சிகளையும் கொடுத்திருக்கிறார்.
எழுதியுள்ள ஜெயச்சந்திரஹாஷ்மி, ஒரு வரலாற்றைக் காட்சிமொழியில் சொல்கிறோம் என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறார்.
இதற்கான கள ஆய்வுகளை மேற்கொண்ட வசந்த்தின் பணி தொடரை மேன்மைப்படுத்தியுள்ளது.
சரத்ஜோதி இயக்கியுள்ளார். கலைப்படைப்புகள் ஏற்படுத்தும் அதிர்வுகளை இந்த ஆவணப்படத்தின் மூலமும் ஏற்படுத்தியிருக்கிறார்.
வீரப்பன் பெயரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி நீண்டபோராட்டங்கள் நடந்த பிறகு சதாசிவா ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டு பல வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அதைப்படித்துப் பார்த்துச் செயல்படுத்த எந்த ஆட்சியும் முன்வரவில்லை.
அந்த அவலத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது இந்த ஆவணப்படத்தொடர். இதைப்பார்க்கும் ஒவ்வொருவரும் அந்த மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்று மனதார நினைப்பது திண்ணம். அந்தக் கருத்துருக்கள் செயல்வடிவத்தை நோக்கிச் செல்லவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதுவரை இதழுலகில் போராடிவந்த நக்கீரன், இப்போது கலையுலகிலும் அதைத் தொடருகிறது.
அதற்காக நக்கீரன் குழுவுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.
– அன்பன்
பின்குறிப்பு :
கூச முனுசாமி வீரப்பன் ஆவணப்படத் தொடர், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் இன்றுமுதல் (14.12.2023) ஜீ5 ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.