கேரளா ஸ்டோரி பட சர்ச்சை – ஏ.ஆர்.ரகுமானின் எதிர்வினை
சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் முன்னோட்டம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
அதில் கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த முன்னோட்டம் கடும் எதிர்ப்புக்குள்ளானது. இப்படம் வரும் மே 5 ஆம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படியான சூழலில் ‘காம்ரேட் ஃபரம் கேரளா’ என்ற ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
அதில், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேரவல்லி முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் சரத் சசி மற்றும் அஞ்சு அசோக் தம்பதிகளுக்கு நடைபெற்ற திருமணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மசூதியில் நடைபெற்ற இந்தத்திருமணம் முழுக்க முழுக்க இந்து சடங்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மணப்பெண்ணின் பெற்றோர் மசூதியின் நிர்வாகத்தை நாடியுள்ளனர்.
இதையடுத்து நிர்வாகம் சார்பில் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 இலட்சம் ரொக்கப்பணம் கொடுக்கப்பட்டதுடன் மசூதியிலேயே திருமணம் நடத்த அனுமதியும் வழங்கப்பட்டது.
முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் அந்த பள்ளிவாசலில் புரோகிதர் வரவழைக்கப்பட்டு சடங்குகள் நடத்தப்பட்டு மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டுகிறார். தொடர்ந்து 1000 பேருக்கு சைவ உணவும் பறிமாறப்படுகிறது.
மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் இந்த காணொலி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தத் திருமணம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி அதாவது 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.
இந்நிலையில் ‘காம்ரேட் ஃபரம் கேரளா’ என்ற பக்கத்தில் ‘மற்றொரு கேரளா ஸ்டோரி’ என தலைப்பிடப்பட்ட இந்தக் காணொலியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும் குணப்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்” எனப்பதிவிட்டுள்ளார்.
இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் மதமாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாக்க் கூறி ‘கேரளா ஸ்டோரி’ போன்ற படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் சூழலில் ஏ.ஆர்.ரகுமானின் இந்தப் பதிவு பெரிதும் கவனம் பெற்றுள்ளது.
இது அதிகாரவர்க்கத்தின் அநியாயத்துக்கெதிராக ஓர் உன்னதக் கலைஞனின் அறச்சீற்றம் என்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.











