பெண்களின் மதிப்பைக் குறைத்த பிக்பாஸ் – கஸ்தூரி விமர்சனம்
திருநெல்வேலியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை கஸ்தூரி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று (அக்டோபர் 12) சென்றார்.
தூத்துக்குடியில் கஸ்தூரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது…
பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இது பல்வேறு நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும். உற்சாகப்படுத்தி இருக்கும். குறிப்பாக வீடியோ எடுப்பவர்கள், குப்பைகளைப் போட்டவர்கள் என எல்லோரையும் அவர் ஆர்வப்படுத்தி இருக்கிறார்.
இன்றைய சமூகத்தில் இரவு நேரத்தில் பெண் பிள்ளைகளைத் தனியாகக் கடைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது.
நகரமயமாதல், இடம்பெயர்தல் ஆகியவற்றால் இன்றைக்கு சாப்பாடு வேண்டும் என்றால் கூட இந்தியில் தான் கேட்க வேண்டிய நிலைக்கு மாறிவிட்டது.
தற்போது பெண்கள் பாதுகாப்பிற்கு மிக அதிகமாக முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு தனியாக மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய நிகழ்ச்சி கிடையாது. அது பொழுது போக்குக்காக நடத்தப்படக்கூடிய நிகழ்ச்சி. அதுவே பொறுப்புள்ள பொழுது போக்காக இருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து.
இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்களை ஒரு சிறிய வட்டத்தில் அடைக்கக் கூடியதாக உள்ளது. இந்த வருடத்தின் பிக்பாஸ் நிகழ்ச்சி பெண்களின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடும் நிகழ்ச்சியாகத் தான் இருந்தது.
இன்றைக்கு தமிழ்நாட்டில் எந்தத் தலைவருக்கு சினிமாவோடு சம்பந்தமில்லை என்று சொல்லமுடியும்?. சினிமாவில் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவர்கள் தான் இன்றைய அரசியலில் இருக்கிறார்கள். எந்த இடத்தில் நல்ல பொறுப்புள்ள மனிதர்கள் இருந்தாலும் அந்த இடத்தில் நாம் நம் தலைவரைத் தேர்ந்தெடுப்பது தவறில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.











