கப்பல் ஏறிய தமிழன் – இணையத்தொடர் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

கடல் பிரிக்கும் தமிழ் இணைக்கும் எனும் முழக்கத்துக்கேற்ப சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்காகத் தயாராகும் இணையத்தொடரின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது. இது அங்குள்ள வசந்தம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும்.
இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் பணியாற்றிய கே.எஸ்.ஐ.சுந்தர் இயக்கும் இத்தொடரின் பெயர் கப்பல் ஏறிய தமிழன்.
இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த விஜே ஜெய்ணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். பகாசுரன் படத்தில் செல்வராகவனின் மகளாக நடித்த தாராக்ஷி மற்றும் சிங்கப்பூரில் புகழ்பெற்ற திவ்யாரவீண் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களோடு ராஜாராணி பாண்டியன், தமிழ் இரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவரும் தற்போது சிங்கப்பூரில் பிரபலமாகவும் இருக்கும் நடிகை கோகிலா,பாண்டிரவி, வீரசமர், அஜயன்பாலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
1940 களில் வெள்ளையர்களை எதிர்த்து நடந்த சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற ஒரு தமிழனின் கதையை மையமாகக் கொண்டு இத்தொடர் உருவாகிறது. இக்கதை தமிழ்நாட்டில் தொடங்கி சிங்கப்பூர் வரை தொடர்கிறது. இதனால், தமிழ்நாட்டின் காரைக்குடியில் இதன் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.
சேகர்வர்தன் ஒளிப்பதிவு செய்யும் இத்தொடருக்கு தேவா இசையமைக்கிறார். இதில் இடம்பெறும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். அண்மையில் இப்பாடல் பதிவு குறித்த காணொலியை வைரமுத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சேரனின் பொற்காலம் படத்தில், தேவா இசையில் வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற பாடல் தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடல். இந்தப்பாடல் சிங்கப்பூர் முன்னாள் அதிபரின் இறுதி ஊர்வலத்தில் ஒலிபரப்பப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து கப்பல் ஏறிய தமிழனுக்காக உருவாக்கியிருக்கும் பாடலும் பெரும் வரவேற்பைப் பெறும் என்று உறுதி கூறுகிறார்கள்.
கப்பல் ஏறினாலும் தமிழன் தமிழன்தான்.