சினிமா செய்திகள்

கடமை என்றார் கமல் கண்டனம் தெரிவிக்கிறது கட்சி – மக்கள் குழப்பம்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் பிப்ரவரி 19 ஆம் தேதியன்று இரவு கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து இயக்குநர் ஷங்கர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக காவல்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் கதாநாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதையொட்டி மார்ச் 3 அன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார்.

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. அவரது வாக்கு மூலம் காணொலியாகப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணை முடிந்தபின் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

என் சகாக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாக இங்கே வந்திருக்கிறேன். இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்ததைக் கூறினேன். இனி இது போன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும், அது தொடர்பான கலந்துரையாடலாகவே இதைப்பார்க்கிறேன் எனக் கூறினார்.

அவர் இப்படிச் சொன்ன சில மணி நேரங்களில் அவருடைய கட்சி சார்பாக ஒரு கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,எங்கள் தலைவரை சாட்சி என்ற பெயரில் விசாரணைக்கு அழைத்தது 3 மணி நேரம் விசாரித்தது கண்டனத்துக்குரிய செயல்,எங்கள் கட்சியின் வளர்ச்சி பிடிக்காத தமிழக அரசு காவல்துறை மூலமாக இப்படிச் செய்திருக்கிறார்கள்.தமிழக அரசே இச்செயலை இத்துடன் நிறுத்திக் கொள்ளவும் என்று கூறப்பட்டுள்ளது.

நற்பணி இயக்க மாநிலச் செயலாளர் ஆர்.தங்கவேலு என்பவரின் பெயரில் இவ்வறிக்கை வெளியானது.

என் சகாக்களுக்குச் செய்யும் கடமை, எதிர்கால விழிப்புணர்வுக்கான கலந்துரையாடல் என்று கமல் சொன்ன பிறகு அவரது கட்சி சார்பில் இப்படி ஒரு அறிக்கை வெளியானது ஏன்? எப்படி? என்று தெரியாமல் மக்கள் குழம்பியுள்ளனர்.

Related Posts