கமல் ரஜினி படங்கள் ஒரேநாளில் தொடக்கவிழா – அதிரடி முடிவு
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மீண்டும் சுறுசுறுப்படைகிறது. அந்நிறுவனத்தின் சார்பில் பல படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறார்களாம்.
அவற்றில் முதன்மையாக அமையவிருப்பது ரஜினியின் 169 ஆவது படம் என்று சொல்லப்படுகிறது.அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இன்னொருபக்கம், கமல் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் தயாரிப்பிலேயே தலைவன் இருக்கிறான் என்கிற படத்தில் கமல் நடிக்க ஒப்பந்தம் நடந்திருப்பதாகச் சொல்லப்பட்டது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப்படம் உருவாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதோடு இந்தப்படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வருகின்றன.
ஆனாலும், இந்தப்படத்தைத் தயாரிப்பதில் லைகா நிறுவனம் ஆர்வம் காட்டவில்லையாம். கமலுடன் ஒப்பந்தம் போட்டு பெரும்தொகை கொடுத்திருந்த போதும் இப்படத்தைத் தொடர அந்நிறுவனம் விரும்பவில்லை என்று சொல்கிறார்கள்.
தொடக்கத்தில் இதனால் அதிர்ச்சியடைந்த கமல், இப்போது இப்படத்தைத் தயாரிக்க யாரும் வரவில்லையென்றாலும் சிக்கலில்லை. நானே தயாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.ஆகவே, தலைவன் இருக்கிறான் படத்தையும் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.
அதோடு, ரஜினி,கமல் ஆகியோரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரஜினி, கமல் ஆகிய இருவரும் நடிக்கும் படங்களின் தொடக்க விழாவை ஒரேநாளில் நடத்தவும் திட்டமிடுகிறார்களாம்.
கமல், ரஜினி ஆகிய இருவரின் படங்களும் ஒரேநாளில் தொடங்குவது தமிழ்த்திரையுலகில் ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.











