காடன் – திரைப்பட விமர்சனம்

வனங்களைக் காக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் காடனுக்கும் வனத்தைப் பணமாக்க என்னும் பணந்தின்னிகளுக்கும் நடக்கும் போர்தான் காடன்.
காட்டில் திரியும் யானைகளைப் பேர் சொல்லி அழைப்பது, மரங்கள் மற்றும் செடிகளோடு பேசுவது, பறவைகளோடு உரையாடுவதென காடன் என்கிற பெயருக்கேற்ற வேடத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.காடனாக நடித்திருக்கும் ராணாவும் ஒரு பக்கம் தோள்பட்டையை உயர்த்திக் கொண்டு ஓடுவது, யானைகள் தன் மீது கோபம் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து கலங்குவது உள்ளிட்ட பல காட்சிகளில் கொடுத்த வேடத்துக்கு முழு உண்மையாக இருக்கவேண்டுமென உழைத்திருக்கிறார்.
கும்கிமாறனாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷால், யானைப்பாகன் வேடத்துக்கு அழகாகப் பொருந்தியிருக்கிறார்.அந்தக்கதாபாத்திரம் மையக்கதையோடு மெல்லிய இழையளவு ஒட்டியிருப்பது பலவீனம்.
அமைச்சராக நடித்திருக்கும் ஆனந்த்மகாதேவன் சிறப்பு. ஆகாஷ், ஸ்ரீநாத், சம்பத்ராம்,ரவிகாலே ஆகியோர் கூட்டணி ஆத்திரத்தை வரவழைக்கிறது.
போஸ்வெங்கட் மற்றும் நாயகிகளாக வரும் ஜோயா ஹுசைன் மற்றும் ஷிரியா பில்கவுன்கர் ஆகியோர் வாழ்க்கை மீதான நம்பிக்கைக்குப் பலம் சேர்க்கிறார்கள்.
தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட ஷிரியா பில்கவுன்கர், ஒரு தாக்குதலின்போது யானையை மட்டும் அழைத்துச் சென்று தூரமாக விடும் காட்சி கண்களில் நீர் வரவைக்கிறது.
அசோக்குமார்ராஜுவின் ஒளிப்பதிவு, ஒரு காட்டுக்குள் பயணம் சென்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
சாந்தனுமோய்த்ரா வின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை. பின்னணி இசை அளவு.
யானைகளின் பிளிறல் பறவைகளின் ஒலி ஆகியனவற்றில் ரசூல்பூக்குட்டியின் இருப்பு தெரிகிறது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரவர்க்கத்தின் ஆதரவோடு, கோயம்புத்தூரில் பல்லாயிரம் ஏக்கர் வனத்தை அழித்து கோயில், குடியிருப்பு ஆகியனவற்றை உருவாக்கி யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு ஜக்கிவாசுதேவ் மீது உள்ளது.
அதனால் ஏற்படும் வலிகளைக் காட்சிகளில் காட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர் பிரபுசாலமன்.
அதை வெளிப்படுத்தும் விதத்தில் நிறைய பலவீனங்கள் இருந்தாலும் அதாவது வேடங்களின் வடிவமைப்பில் குளறுபடிகள் திரைக்கதையில் குழப்பங்கள் ஆகியன இருந்தாலும் வனங்களைப் பாதுகாப்பதும் வன உயிர்களின் இருப்பைப் போற்றுவதும்தான் மனிதர்கள் உயிர்வாழும் உத்தரவாதம் தரும் என்கிற உண்மையை முகத்திலறைந்தாற்போல் சொல்ல வந்திருக்கிறார் என்பதால் பாராட்டலாம்.