சூர்யா 37 படக்குழு ரசிகர்களை ஏமாற்றுகிறதா?
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்திருக்கிறது.
மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இலண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
இதுவரை இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தற்போதுவரை ‘சூர்யா37’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று வாக்கெடுப்பு தொடங்கியுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கே.வி.ஆனந்த், “கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். ‘சூர்யா37’ படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்” என்று வாக்கெடுப்பு தொடங்கி அதற்கு “மீட்பான், காப்பான், உயிர்கா” என மூன்று பதில்கள் கொடுத்துள்ளார்.
ஆனால் படக்குழு ஏற்கெனவே பெயரை முடிவு செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இம்மூன்றில் ஒரு பெயரான காப்பான் என்கிற பெயரை படக்குழு இறுதி செய்துவிட்டதாகவும், இந்த வாக்கெடுப்பு வெறும் கண்துடைப்பு என்றும் சொல்லப்படுகிறது.
வாக்கெடுப்பா? கண்துடைப்பா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.











