தனுஷ் ஐசரிக்கு ஒரு நியாயம் சிம்பு தாணுவுக்கு அநியாயமா? – வெடிக்கும் கேள்விகள்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு கடந்த புதன்கிழமையன்று திடீரென நிறுத்தப்பட்டது.
அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது.
தயாரிப்பளர்கள் சங்கமே ஒரு படத்தை நிறுத்தியது ஏன் என்று கேட்டால்?,தயாரிப்பாளர் ஐசரிகணேஷ், சிம்பு மீது புகார் கொடுத்திருப்பதாகவும் அதன் காரணமாகப் படப்பிடிப்பை நிறுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
என்ன நடந்தது? என்று விசாரிக்கும்போதே டி.ராஜேந்தரின் அறிக்கை வெளியானது.அதில்,ஐசரிகணேஷ் கொடுத்த முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் அவர் வேறுபடத்தில் நடிக்கப்போய்விட்டார் என்பது புகார்.
இதேபுகாரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காகத் தொடுத்தார் ஐசரிகணேஷ்.அதை விசாரித்த நீதிமன்றம்,சிம்பு பக்கமே நியாயம் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பின்பு, அதேபுகாரைச் சொல்லி அவர் படத்தை முடக்கியிருப்பது ஒருபக்கம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றம்,இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்கிற குர்ல்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.
ஒரு நடிகர் ஒரு தயாரிப்பாளரிடம் முன்பணம் வாங்கிவிட்டு,அந்தப்படத்தில் நடிக்காமலோ அல்லது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலோ இன்னொரு படத்தில் நடிக்கப்போனால், தொழிலாளர்களைக் கருவிகளாகப் பயன்படுத்தி அந்தப்படத்துக்குத் தடை ஏற்படுத்துவதுதான் தயாரிப்பாளர்கள் சங்கம் செய்யும் வேலையென்றால்? இது மிக மிகத் தவறான செயல் என்கிற எதிர்ப்புகளும் வருகின்றன.
அதேநேரம்,இது ஒரு வழிமுறை என்று காரணம் சொல்லப்படுமானால் இந்த வழிமுறை எல்லாருக்கும் கடைபிடிக்கப்படுகிறதா? என்கிற கேள்வியும் வருகிறது.
எடுத்துக்காட்டாக, இதே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராக இருந்த தேனாண்டாள் முரளி, நடிகர் தனுஷுக்குப் பலகோடி ரூபாயைக் கொடுத்துவிட்டு அதைத் திரும்பப் பெறமுடியாமல் எவ்வளவோ போராடினார்.போராடிக் கொண்டே இருக்கிறார்.ஆனால்,ஒரு முன்னேற்றமும் இல்லை.அவர் மிகவும் நொடிந்து போயிருக்கிறார்.
இன்று சிம்பு மீது புகார் கொடுத்து கலைப்புலிதாணுவின் படத்தை நிறுத்தியிருக்கும் ஐசரிகணேஷ்தான்,தேனாண்டாள் முரளி புகார் கொடுத்திருக்கும் தனுஷை வைத்துப் படம் தயாரித்திருக்கிறார்.அந்தப்படம் விரைவில் வெளியாகவிருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது.
தனுஷை வைத்துப் படம் தயாரிக்கும்போது தேனாண்டாள் முரளியின் புகார் ஐசரிகணேஷின் கண்களுக்கு எட்டவில்லையா? காதுகளுக்குக் கேட்கவில்லையா? அவருக்கு வந்தால் இரத்தம் கலைப்புலி தாணுவுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று காட்டமாகக் கேட்கிறார்கள்.
சரி, இப்போது சிம்பு மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கையைக் காரணமாகச் சொல்லி ஐசரிகணேஷ் தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் படத்தை வெளியிடத் தடை ஏற்படுத்துவார்களா? என்றும் கேட்கிறார்கள்.
அதேபோல்,தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தற்போது தலைவராக இருக்கும் தமிழ்க்குமரன், தலைமை நிர்வாகியாக இருக்கும் லைகா நிறுவனம், நடிகர் விஷாலுக்கு பலகோடி பணம் கொடுத்துவிட்டு அந்தப் பணத்தை வாங்க நீதிமன்றத்தை நாடி ஆறேழு வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறது. பணம் வந்தபாடில்லை.நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஏதேதோ காரணங்களைச் சொல்லி பணம் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் விஷால்.
அவருடைய படங்களுக்கும் இதேவழிமுறையை தயாரிப்பாளர்கள் சங்கம் கடைபிடிக்குமா? என்று கேட்கிறார்கள்.
தனுஷ், விஷால் ஆகியோர் மீது வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருப்பதால் அவை வெளியே தெரிகிறது.முன்னணிக் கதாநாயகர்கள் பலர் மீது இதே குற்றச்சாட்டுகள் உண்டு.அவை வெளியில் தெரியாமல் இருக்கின்றன.
அவர்கள் யார் மீதும் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்காமல் தயாரிப்பாளர் தாணுவும் சிம்புவும் இணைந்திருக்கும் படம் மீதும் மட்டும் இந்த நடவடிக்கை எடுக்க என்ன காரணம்? இதன் பின்னணி என்ன? உள்குத்து என்ன? என்கிற கேள்விகளெல்லாம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாகப் கேட்கப்படுகின்ற கேள்விகளாக இருக்கின்றன.
– கதிரோன்











