மாஸ்டர் ரிலீஸ் தேதியை அறிவித்த அமைச்சர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களாக வெளியாகாமல் உள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையை லலித் குமார் கைப்பற்றியுள்ளார்.
இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டுமானால் பங்குத்தொகையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிற தயாரிப்புத்தரப்பின் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இதில் இன்னும் முழுமையான முடிவு எட்டப்படவில்லை என்பதால் பட வெளீயீட்டுத்தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அதேசமயம், இன்று கயத்தாறு அருகே கடம்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர்ராஜு மாஸ்டர் வெளியீட்டுத்தேதியைச் சொல்லியிருக்கிறார்.
அவர் கூறியதாவது….
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சனவரி 13 ஆம் தேதி வெளியிடப்போவதாக அந்த படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒ.டி.டி. போன்ற தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவது உகந்தது அல்ல என நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.
கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தால், ஓ.டி.டி.என்பது தற்காலிக ஏற்பாடு. இது நிரந்தரமாக இருக்கக் கூடாது என கூறியிருந்தேன். எனது கருத்தை ஏற்று மாஸ்டர் திரைப்படத்தைத் திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என படக்குழுவினர் சொன்னதற்கு நடிகர் விஜய் மற்றும் தயாரிப்புக்குழுவுக்கு நன்றி. அவர்கள் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டால் அரசு பரிசீலிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











