செய்திக் குறிப்புகள்

தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சி – ஜாங்கோ படக்குழுவுக்குப் பாராட்டு

குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதை நேர வளையம் (டைம்லூப்) என்கிறார்கள்.தமிழ்த் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான படம் எதுவும் எடுக்கப்படவில்லை.இப்போது, முதல் திரைப்படமாக ஜாங்கோ உருவாகிறது.

எத்தனையோ வித்தியாசமான படைப்புகளைக் கண்டுள்ள தமிழ்த் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது.

இந்தப் படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார்.இவர், அறிவழகன் இயக்கிய ஈரம் மற்றும் வல்லினம் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகவும் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டியில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர். சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார்.

சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

தேனியைச் சேர்ந்த இயக்குநர் மனோ கார்த்திகேயன் இப்படம் பற்றிக் கூறியதாவது…

ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய படம் தான் ஜாங்கோ. காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான முதல் திரைப்படமாக ஜாங்கோ இருக்கும். குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழும், அவை வித்தியாசமான திரைக்கதையுடன் சுவாரசியமான முறையில் காட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறுகிறார்.

இந்தப் படத்தில் அறிமுக நடிகர் சதீஷ்குமார் மற்றும் டிக்டாக் புகழ் மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இவர்களோடு அனிதா சம்பத், ஹரீஷ் பேரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் டேனியல் அன் போப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் சான் லோகேஷ் படத்தொகுப்பைக் கையாளுகிறார்.

இந்தப் படத்திற்கு இசை ஜிப்ரான். ஹரிசரண பாடிய *அனலே அனலே* என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை நா.இதயா எழுதியுள்ளார்.

இந்நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டுவிழா செப்டம்பர் 6 அன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்வில் படக்குழுவினர் உட்பட திரளானோர் பங்கேற்றனர். அனைவரும் படக்குழுவின் இந்தப் புதிய முயற்சியைப் பாராட்டிப் பேசினர்.

Related Posts