இளையராஜா இசையில் கபிலன் எழுதிய பாடல் – சித்ஶ்ரீராம் மகிழ்ச்சி
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதி உட்பட பலர் நடிக்கும் படம் சைக்கோ.
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 7 அன்று சென்னையில் தொடங்கியது. சில நாட்களில் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
அடுத்த கட்டப் படப்பிடிப்பு கோவையில் செப்டம்பர் 26 முதல் தொடங்கவிருக்கிறதாம்.
அன்று தொடங்கி தொடர்ந்து நாற்பதுநாட்கள் நடைபெறவிருக்கிறதாம். அதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
அவருடைய இசையில் மக்கள்கவி கபிலன் பாடல்கள் எழுதுகிறார். சித்ஶ்ரீராம் குரலில் அவருடைய பாடல்பதிவு அண்மையில் நடைபெற்றதாம்.
இதுதொடர்பாக, இளையராஜா சார் இசையில் பாடவேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை, அது இந்தப்படத்தில் நிறைவேறியது, ராஜாசார் இசையில் கபிலனின் வரிகளில் உருவாகியிருக்கும் இந்தப்பாடல் நிச்சயம் பேசப்படுகிற பாடலாக இருக்கும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார் சித்ஶ்ரீராம்.
ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான விக்ரம் நடித்த ஐ படத்தில் இடம்பெற்ற என்னோடு நீயிருந்தால் பாடலை கபிலன் எழுதியிருந்தார். அந்தப் பாடலையும் சித்ஶ்ரீராம் பாடியிருந்தார். அதனால் அவருக்குப் பெரிய அளவில் அறிமுகமும் புகழும் கிடைத்தது. அப்பாடல் பாடியதற்காக ஃபிலிம்பேர் விருதும் அவருக்குக் கிடைத்தது.
இப்போது மீண்டும் கபிலன் எழுதிய பாடலைப் பாடியிருப்பதால் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார் சித்ஶ்ரீராம்.










