September 1, 2026
Uncategorized சினிமா செய்திகள்

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு – கண்கலங்கிய டி.இராஜேந்தர்

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம்.

அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசனுக்கு இன்று (சனவரி 11,2022) கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பு செய்தது.

ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இணையம் மூலம் உரையாற்றி விழாவைத் தொடங்கிவைத்தார். விழாவில். தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், பாராஒலிம்பிக் மாரியப்பன் மற்றும் சிம்பு ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விழாவுக்கு சிம்புவின் தந்தை டி.இராஜேந்தர் மற்றும் தாய் உஷாராஜேந்தர் ஆகியோர் வந்திருந்தனர்.சிம்பு மேடையில் பட்டம் வாங்கிய நேரத்தில் இருவரும் கண்கலங்கினர்.

டாக்டர் பட்டம் பெற்றபின் பேட்டியளித்த சிம்பு,

இந்தப் பட்டம் எனக்கு உரித்தானது அல்ல. எனது இந்த நிலைக்கு முழுக் காரணம் எனது தந்தையும் தாயும்தான். சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்தது அவர்களால்தான். 9 மாதக் குழந்தையில் இருந்து என்னை இந்தப் பயணத்தில் இணைத்து அவர்கள்தான். எனவே இந்தப் பெருமைகள் அனைத்தும் அவர்களுக்கே போய்ச் சேரவேண்டும். அவர்களைப் போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா எனத் தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றார்.

வேல்ஸ் பல்கலைக்கழகம் நிறுவனர் ஐசரி கணேஷ்,

சிம்பு இன்று முதல் டாக்டர் சிம்பு என அழைக்கப்படுவார். கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் கலைத்துறைக்குப் பலவித சேவைகள் செய்துள்ளார் சிம்பு. ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே நடிக்கத் தொடங்கியவர். இன்னும் அவரின் பயணம் தொடர்கிறது. 50 படங்களைத் தற்போது நெருங்கி வருகிறார். திரைத்துறையில் பன்முகம் கொண்ட கலைஞராகத் திகழ்வதால் அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமை கொள்கிறேன். சிம்புவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்

என்று கூறினார்.

பட்டம் பெற்றபின்பு அதுகுறித்து சிம்பு தன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்காக ஐசரிகணேஷ் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் குழு உறுப்பினர்களுக்கும் நன்றி.

இந்த மாபெரும் கௌரவத்தை தமிழ்த்திரையுலகுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்.
அவர்களால்தான் இது நடந்தது.

இறுதியாக என் இரசிகர்கள், நீங்க இல்லாமா நானில்லை

இறைவனுக்கு நன்றி

இவ்வாறு சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

Related Posts