குட்நைட் – திரைப்பட விமர்சனம்

பெரும்பாலான குடும்பங்களில் பெரும் சிக்கலாக இருந்துகொண்டிருப்பது குறட்டை. அதனால் வரும் சிக்கல்களை நாகரிகம் கருதி பொதுவெளியில் பேசுவதில்லை. ஆனால், அதை மையப்படுத்தி ஒரு கதை எழுதி அதற்கொரு திரைக்கதை அமைத்து பொருத்தமான நடிகர் நடிகையரைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்து, அய்யய்யோ குறட்டைக் கதையா? என நினைப்போரையும் சிரிக்க வைத்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.
குறட்டைக் கதைக்கு குட்நைட் என்கிற நகைமுரணான பெயர் வைத்ததுபோலவே படம் நெடுக காட்சிகளிலும் அந்த உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார்.
நாயகன் மணிகண்டன், நாயகி மீதாரகுநாத் ஆகியோரின் முதலிரவுக் காட்சியில், கணவனிடம் தன்னைப் பற்றிச் சொல்லும்போது சத்தமே பிடிக்காது என்றும் அதனால் வானொலி, திரைப்படம் உட்பட எதிலும் ஆர்வம் இல்லை எனும் காட்சியே சாட்சி.
ஏற்கெனவே பரிதாபமாகத் தெரிவார் மணிகண்டன். இந்தப்படத்தில் கேட்கவே வேண்டாம். இதற்கெனவே பிறப்பெடுத்தவர் போல் அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார்.
நாயகி மீதாரகுநாத், ரமேஷ்திலக், பாலாஜிசக்திவேல், ரேச்சல், பக்ஸ் உட்பட படத்திலுள்ள எல்லாக் கதாபாத்திரங்களும் கச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஷான்ரோல்டனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தாழ்வில்லை. குறட்டை சத்தத்துக்காகக் கூடுதலாக உழைத்திருக்கிறார்கள்.
ஜெயந்த்சேதுமாதவனின் ஒளிப்பதிவு குறைந்த வசதியிலும் நிறைவாக அமைந்திருக்கிறது.
பரத்விக்ரமனின் படத்தொகுப்பில் நடித்த அனைவருக்கும் நற்பெயர்.
ஒரு கதையில் தன்னைப் பொருத்திப் பார்க்க இரசிகன் முனைந்தால் அப்படம் பெரிய வெற்றி வெறும் என்பார்கள். அந்த உளவியலைக் கையிலெடுத்து, குடும்பத்தோடு சிரித்து இரசித்துப் பார்க்கும் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.
குட்நைட் – கோடை கொண்டாட்டம்
– பாண்டியன்