கெளதம் மேனனின் டேஸ்ட் முகம் சுளித்த குடும்பம் – குட்டி ஸ்டோரி சங்கடம்
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி.கே.கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. இந்தப் படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர்.
முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ் மேனன், இரண்டாவது தொகுப்பை விஜய், மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு, நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர்.
முதல்முறையாக 4 இயக்குநர்கள் 4 கதைகளை இயக்கி பெரிய திரையில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் கௌதம் மேனன் இயக்கி உள்ள கதையில் அவரே நாயகனாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.
விஜய் இயக்கியுள்ள கதையில் மேகா ஆகாஷ் நாயகியாகவும் அமிர் டாஸ் பிரதான் ஆர்யா சுகாசினி ஆகியோர் நடித்துள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கியுள்ள கதையில் வருண் சங்கீதா சாக்ஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
நலன் குமாரசாமி இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் குடும்பத்தினர் உட்பட சில முக்கியஸ்தர்களுக்குப் படம் திரையிடப்பட்டதாம்.
அப்போது, கெளதம்மேனன் இயக்கியுள்ள பகுதியைப் பார்த்துப் பலர் முகம் சுளித்துள்ளனர். அவ்வளவு ஆபாசச் சொற்கள் இடம்பெற்றிருந்ததாம். ஒரு பெண்ணை வைத்துக் கொண்டே நண்பர்கள் சகட்டுமேனிக்குக் கெட்ட வார்த்தைகள் பேசிக்கொள்வது போல் இருக்கிறதாம்.
அவற்றைப் பார்த்துத்தான் குடும்பத்தினர் முகம் சுளித்துள்ளனர். ஆனால் அவை எல்லாம் தணிக்கையின் போது அமைதிப்படுத்தப்பட்டுவிட்டது என்று சொல்லப்படுகிறது. தணிக்கைக்கு முந்தைய பிரதியைத் திரையிட்டதால் இந்தச் சங்கடம் நேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
இப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்று சொல்லி எடுக்கப்பட்டதால் இஷ்டத்துக்குக் கெட்ட வார்த்தைகளைப் போட்டிருக்கிறார் கெளதம் மேனன். திடீரென திரைக்கு வருவதால் இவற்றை அமைதியாக்க வேண்டியதாகிவிட்டது.
ஆனாலும் இதில் கெளதம்மேனனின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது என்கிறார்கள்.











