கருடன் பட விழாவில் மூன்று கதாநாயகர்கள் – விவரம்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தில் கதாநாயகனாகப் பதவி உயர்வு பெற்றார் சூரி.அதற்கடுத்து விடுதலை 2 படமும் தயாராகி வருகிறது.
மூன்றாவதாக சூரி கதாநாயகனாக நடிக்கும் கருடன் படத்துக்கும் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கிறார்.
திரைக்கதை வசனமெழுதி இயக்கியிருக்கிறார் துரை.செந்தில்குமார்.
இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்
ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்புப் பணிகளைக் கையாள, ஜி.துரைராஜ் கலை இயக்கப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படம் மே 31 ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி மே 21 அன்று நடைபெறவுள்ளது.
சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடக்கவிருக்கும் இந்நிகழ்வில் சூரி, யுவன்ஷங்கர்ராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு கதை எழுதிய வெற்றிமாறனும் கலந்து கொள்கிறார்.
சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி மற்றும் ஆர்யா ஆகியோர் கலந்து கொள்கிறார்களாம்.
இப்படத்தின் முன்னோட்டம் நல்ல வரவேற்பைப் பெறும் வகையில் தொகுக்கப்பட்டிருக்கிறதாம்.அதோடு படத்தின் பாடல்களும் நன்றாக வந்திருக்கின்றனவாம்.
அவற்றை வெளியிடும் நிகழ்வில் இம்மூன்று கதாநாயகர்ர்கள் கலந்து கொள்வதால் அம்முன்றோட்டம் உடனடியாக வெகு மக்களைச் சென்றடைந்துவிடும்.
இப்போதெல்லாம் அவரவர் படத்தை விளம்பரப்படுத்துவதிலேயே பலர் சுணக்கம் காட்டுகிறார்கள்.
இந்நிலையில், தன்னுடன் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் கதாநாயகனாகிவிட்டாரே என்று பொறாமைப் படாமல் அவருடைய படத்தை விளம்பரப்படுத்தும் நிகழவில மூன்று கதாநாயகர்கள் கலந்து கொள்வது ஆரோக்கியமான விசயம் என்று சொல்லி மகிழகிறார்கள் திரையுலகினர்.
இது போன்ற நிகழ்ச்சிகள் தொடரட்டும்.











