சினிமா செய்திகள்

கைவிட்ட தனுஷ் – தவிக்கும் இயக்குநர்

இப்போது, தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம், அடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் ஆகியவற்றோடு தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்கள் இருக்கின்றன.

இவற்றிற்கடுத்து,ஹரிஷ்கல்யாண் நடித்த பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இளன் சொன்ன கதை தனுஷுக்கு மிகவும் பிடித்திருந்ததாம். அதேசமயம், அப்படத்தின் மொத்தச் செலவு காரணமாக சத்யஜோதி நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்க தயக்கம் காட்டியதாம்.

அந்நிலையில், பிரபல நிதியாளர் மதுரை அன்பு மீண்டும் படத்தயாரிப்பில் இறங்க முடிவெடுத்து தனுஷை அணுகியிருக்கிறார்.

அவரிடம் தனுஷ், இளன் கதையைப் படமாக்கலாம் என்று சொல்ல அவரும் ஒப்புக்கொண்டாராம்.

எனவே, மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் இளன் தனுஷ் கூட்டணி இணையவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.

இப்போது அதிலும் மாற்றம் நடந்துவிட்டதாம்.

மதுரை அன்பு தயாரிப்பில் தானே இயக்குநராவது என முடிவு செய்துவிட்டாராம் தனுஷ். அதற்காக அவர் ஒரு கதையைத் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். அக்கதையை தயாரிப்பாளரும் ஏற்றுக்கொள்ள அதையே படமாக்குவது என்றும் தனுஷே இயக்குவது என்றும் உறுதியாகிவிட்டதாம்.

இதனால் தனுசை நம்பிப்போன இயக்குநர் இளன் படமில்லாமல் தவித்துநிற்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஹரிஷ்கல்யாண் நடிக்கும் ஸ்டார் என்கிற படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு அது நின்று போன நேரத்தில் தனுஷ் ஆதரவளித்தார். இப்போது அவரும் கைவிட்டுவிட்டதால் தடுமாறிப்போயிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Related Posts