சினிமா செய்திகள்

நடிகை சித்ரா தற்கொலை – கணவர் திடீர் கைது

நடிகை சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் சின்னத் திரையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நடிகை சித்ராவுக்கு ஹேம்நாத் என்பவரோடு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும், ஹேம்நாத்க்கும் பதிவுத் திருமணம் நடந்தது.

இந்தத் திருமணத்தில் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் கணவர் ஹேம்நாத் விடுதிக்கு வெளியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலில் இரத்தக் காயங்கள் இருந்துள்ளது. கணவர் ஹேம்நாத் சித்ராவிடம் சண்டை போட்டு விடுதி அறையை விட்டு வெளியே போன பிறகு சித்ரா தற்கொலை செய்துகொண்டாரா? என காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சித்ராவின் மரணம் குறித்து இரு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விசாரணைக்காக நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சித்ராவின் பெற்றோர் மற்றும் கணவர் ஹேம்நாத் ஆகியோர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று பகல் 12 மணிக்கு சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, சித்ராவின் சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனர். ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ அவர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்தார். 12 மணிக்கு விசாரணை தொடங்கி 3 மணி நேரம் நடைபெற்றது.

விசாரணை முடிந்து வெளியில் வந்த சித்ராவின் தாய் விஜயா நிருபர்களிடம் கூறியதாவது:-

முழுமையாக விசாரணை முடிந்த பின்பு முழுத் தகவலை அளிக்கிறோம். எந்த ஒரு தாயும் மகளின் தற்கொலைக்குக் காரணமாக மாட்டார். சித்ரா தற்கொலைக்கு முழுக்க, முழுக்க ஹேம்நாத் தான் காரணம். அதற்கான விவரங்களை ஆர்.டி.ஓ. விசாரணையில் கூறியுள்ளோம். மீண்டும் அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராவோம். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. இன்று விசாரணை மேற்கொள்ள இருந்த நிலையில் திடீரென, சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக நசரத்பேட்டை காவல்துறையினர் ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிகழ்வு சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேம்நாத்தைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்று பலரும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.

Related Posts