October 29, 2025
சினிமா செய்திகள்

ஹிப்ஹாப் ஆதியின் வீரன் வில்லங்கம் – கேப்டன் மில்லருக்குச் சிக்கல்?

ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் கேப்டன் மில்லர்.பீரியட் எனப்படும் முற்காலக்கதையைக் கொண்டு உருவாகிறது.

இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படம் டிசம்பர் 15,2023 அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்ப்டம் ஒரு எதிர்பாரா சிக்கலில் சிக்கி இருக்கிறது.

அது என்ன?

கேப்டன் மில்லர் படத்தைத் தயாரித்திருக்கும் சத்யஜோதி நிறுவனம், ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்த வீரன் படத்தைத் தயாரித்திருந்தது. அப்படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியானது.

அப்படத்தின் வியாபாரம் டிஸ்டிரிபியூசன் எனப்படும் விநியோக முறையில் நடந்தது.

சென்னை உள்ளிட்ட மூன்று விநியோகப்பகுதிகளை ஒரு குழுவும், மீதமுள்ள தமிழ்நாடு விநியோகத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனமும் பெற்றிருந்தன.

இதற்காகத் தயாரிப்பு நிறுவனம் பெற்றிருந்த முன்தொகை சுமார் எட்டுகோடி என்று சொல்லப்படுகிறது. இதில் ஐந்தரை கோடி ரூபாயை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனமும் இரண்டரை கோடி தொகையை அந்தக் குழுவும் கொடுத்திருந்தது என்கிறார்கள்.

ஆனால், அந்தப்படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இதனால் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்துக்கு சுமார் நான்கரை கோடியை தயாரிப்பு நிறுவனம் திருப்பித் தர வேண்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப்பணத்தைக் கேட்டால், உங்களால்தான் நட்டம், நீங்கள் வீரன் வெளியான அடுத்தவாரம் வெளியான போர்த்தொழில் படத்தை அதிகத் திரையரங்குகளில் வெளியிட்டதால்தான் வீரன் வருமானம் பாதிக்கப்பட்டுவிட்டது என்று சொல்கிறார்களாம்.

இதைக் கேட்டுஅதிர்ச்சியான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி,சக்தி வாய்ந்த விநியோகஸ்தர்கள் சங்கத்தில் சத்யஜோதி நிறுவனத்தின் மீது புகார் கொடுத்திருக்கிறதாம்.

வீரன் கணக்கு வழக்கு வில்லங்கமாகி புகார் வரை சென்றிருக்கிறது. பொதுவாக ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மீது இதுபோன்றதொரு புகார் வந்தால்,அச்சிக்கல் சரியாகும் வரை அந்நிறுவனத்தின் அடுத்த படம் வெளியாவது தடை செய்யப்படும் என்பது வழக்கம்.

எனவே, வீரன் வில்லங்கத்தால் கேப்டன் மில்லருக்குச் சிக்கல் என்கிற பேச்சு வந்திருக்கிறது.

Related Posts