அசோக்செல்வனின் பிராமிஸ் – விவரம்
போர் தொழில்,சபா நாயகன், ப்ளூ ஸ்டார் என தொடர் வெற்றிப் படங்களில் நடித்ததோடு கமல் சிம்பு மணிரத்னம் உள்ளிட்டோர் இணைந்த தக் லைஃப் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து கவனம் ஈர்த்த அசோக் செல்வன்,இப்போது நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அசோக்செல்வன் 23 (AS 23) என்று அழைத்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் கதையினை ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார். மாபெரும் வரவேற்பைப் பெற்ற பட இயக்குநரின் கதை என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் இயக்குநர் இவரிடம் பணியாற்றிய்வர் என்பதால் இந்தப் படத்துக்குக் கதை கொடுத்திருக்கிறார் விக்னேஷ் ராஜா என்று சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தில் அசோக் செல்வனுக்கு நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இப்படத்துக்கு கெளதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.பீட்டர் ஹெயின் சண்டைப்பயிற்சி அமைக்கிறார்.
ஓ மை கடவுளே படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர்கள் அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம்.ஹேப்பி ஹை பிக்சர்ஸ் எனும் நிறுவனம் மூலம் அந்தப் படத்தைத் தயாரித்த அவர்களுக்கு முதல்படமே வெற்றிப் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இந்தப்படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி பூசையுடன் தொடங்கியது.
சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இப்போது படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம்.
தீபாவளியை முன்னிட்டு இப்படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் விரைவில் இப்படம் குறித்த தகவல்கள் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அசோக்செல்வனின் சந்தை மதிப்பை விடக் கூடுதல் பொருட் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் அவருக்கு முழுமையான கதாநாயகன் அந்தஸ்தை வழங்கும் படமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
காதல் நாயகனாக வெற்றிகரமாக வலம்வரும் அவர் பீட்டர் ஹெயினின் சண்டைப்பயிற்சியில் மிரட்டலான சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறாராம்.
இப்படத்துக்கு பிராமிஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.
இது அசோக் செல்வன் தன் இரசிகர்களுக்கும் தன்னை நம்பிப் படம் பார்க்க வருகிற பொதுமக்களுக்கும் நிச்சயம் நல்லபடமாக இது இருக்கும் வந்து பாருங்கள் என்று பிராமிஸ் செய்வது போல் இருக்கும் என்கிறார்கள்.
நல்லது. நடக்கட்டும்.











