December 18, 2025
விமர்சனம்

சிம்புவின் அரசன் ப்ரோமோ – விமர்சனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் அறிமுகம் இன்று மாலை திரையரங்குகளில் வெளியானது.அனிருத் இசையமைத்திருக்கிறார்.

சிம்பு இரசிகர்களால் நிறைந்திருந்த திரையரங்குகளில் எடுத்தவுடன் தனுஷ் வந்தார்.ஆம்,வடசென்னை படத்தின் காட்சிகள் ஓரிரு நிமிடங்கள் திரையிடப்பட்டன.அதன் இறுதியில் தனுஷ் கீழே விழுவது போன்ற ஒரு காட்சியைத் தொடர்ந்து சிம்புவின் கால்கள் அழுத்தமான நடையுடன் திரையில் தோன்றியது.

திரையரங்கம் இடிந்துவிட்டதோ என்று அச்சப்படும்படி சிம்பு இரசிகர்களின் ஆரவாரம்.கையில் அரிவாளுட்ன் சிம்பு நடக்கிறார் அறிமுகப்படம் தொடங்குகிறது.

திரை முழுக்க தாடி மீசையுடன் இருக்கும் சிம்பு முகத்தைச் சரி செய்து கொண்டு பேசத் தொடங்குகிறார்.எதிரில் இயக்குநர் நெல்சனும் அவருடைய உதவியாளரும் அவரைப் படமெடுக்கக் காத்திருக்கிறார்கள்.

எடுத்தவுடன் இயக்குநருக்கே சில அறிவுரைகள் சொல்லிவிட்டு அடுத்து என்னோட கேஸ் போயிட்டு வந்துடுறேன் எனச் சொல்லிக் கொண்டே நீதிமன்றத்துக்குள் ஓடுகிறார்.

போகும்போது திரும்பி, சார் என் கேரக்டர்ல யாரை நடிக்க வைக்கப் போறீங்க? என்று நெல்சனிடம் கேட்கிறார் சிம்பு.அதற்கு உங்க மனசுல யாரு இருக்கா? என நெல்சன் கேட்க அதற்கு சிம்பு சொல்லும் விடையில் அரங்கத்துக்குள் பூகம்பம் வந்துவிட்ட உணர்வு.ஆம், தனுஷை நடிக்க வைங்க சார் சூப்பரா இருக்கும் என்கிறார் சிம்பு.

நீதிமன்றத்துக்குள் குற்றவாளிக் கூண்டில் கைகட்டி நிற்கிறார் சிம்பு.ஒரே இரவில் மூணு கொலை செஞ்சதா உங்க மேல குற்றம் சுமத்தியிருக்காங்க, நீங்க என்ன சொல்றீங்க? என்று நீதிபதி கேட்கிறார்.அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் சிம்பு.நிறையப் பேர் சாட்சி சொல்லியிருக்காங்களே என்று நீதிபதி கேட்க,அதெல்லாம் பொய்ங்க என்கிறார் சிம்பு.

சாதாரணமாகக் கடந்து போகக் கூடிய இந்த உரையாடல்களுக்கு நடுவில், கையில் அரிவாளுடன் முகம் மற்றும் உடல் முழுக்க இரத்தக் கறையுடன் மீசையில்லாத சிம்பு திரையில் தோன்றி அதிர வைக்கிறார்.

இரத்தக் கறையைப் பார்த்து அதிருப்தியாக உணரும் நேரத்தில், நம்முடைய இடத்திலேயே வந்து நம்மாளுங்கள வெட்டியிருக்காங்கடா? இப்பதான் நடந்துருக்கு ரொம்ப தூரம் போயிருக்கமுடியாது போய்ப்பாருங்க என்று ஒரு பெருங்கூட்டம் ஓடிவருகிறது.

முகத்தை மட்டும் திருப்பி அந்தக் கூட்டத்தைப் பார்க்கிறார்.நமக்கு சிலிர்க்கிறது. சிம்பு ஓடவில்லை ஒதுங்கவில்லை மீண்டும் அரிவாளை எடுத்துக் கொண்டு அந்தப் பெருங்கூட்டத்தை தனியாளாக எதிர்கொள்கிறார்.

அறிமுகம் நிறைவடைகிறது.

இந்த அறிமுகப்படத்தில் தாடி மீசையுடன் வருகிற சிம்பு நடித்து அசத்துகிறார் என்றால் மீசையில்லாத சிம்பு பார்வையாலும் உடல்மொழியாலும் மிரட்டியிருக்கிறார்.

இயக்குநர் நெல்சனின் தோற்றமும் நடிப்பும் வசன உச்சரிப்பும் சிம்புவின் பெருமையை மேலும் உயர்த்துவது போல் அமைந்திருக்கிறது.

இந்த அரசன் ஏராளமான அதிர்வுகளை உருவாக்கப்போகிறான் என்கிற எதிர்வு கூறும் அறிமுகப்படமாக அமைந்திருக்கிறது.

சிம்பு இரசிகர்களுக்குப் பெரு விருந்து. திரைப்பட இரசிகர்களுக்கு கறி விருந்து.

– எழிலன்

Related Posts