October 17, 2025
சினிமா செய்திகள்

அரசன் படக்குழுவின் புத்தம் புதிய முயற்சி – திரையரங்கினர் மகிழ்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன்.

அவர் அறிவிப்பதற்கு முன்பே அப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. ஜூன் 16,17 ஆகிய நாட்களில் அப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்தது.பட அறிவிப்பையே ஒரு காணொலியாக வெளியிட வேண்டும் என்பதற்காக அந்தப் படப்பிடிப்பு நடந்தது.

அன்று காலை எட்டுமணிக்கெல்லாம் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு.

சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடந்த அந்த விளம்பரப்படப்பிடிப்பில் 200 க்கும் மேற்பட்ட துணைநடிகர்களுடன் சிம்பு மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இப்போதைக்கு இந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் நெல்சன், தேவைப்பட்டால் படத்திலும் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

அதன்பின் ஜூலை முதல்வாரத்தில் மீண்டும் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அறிமுகக் காணொலி தயாராகியிருக்கிறது.

அக்டோபர் 4 ஆம் தேதி அதை வெளியிடுவதாக அறிவித்தார்கள்.ஆனால் தணிக்கைச் சான்று கிடைக்கவில்லை என்று சொல்லி அதைத் தள்ளிப்போட்டிருக்கிறார்கள்.தணிக்கைச் சான்று கிடைத்தால்தான் திரையரங்குகளில் அதை ஒளிபரப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அதற்கு தணிக்கைச் சான்று பெற்று திரையரங்குகளில் அக்டோபர் 16 அன்று வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

பொதுவாக திரையரங்குகளில் இதுபோன்ற அறிமுகப்படத்தை வெளியிடுவதென்றால் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் இடைவேளையில் திரையிடுவது வழக்கம்.

அந்த வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அரசன் பட அறிமுகத்தை தனியாக நுழைவுச் சீட்டு விற்பனை செய்து எந்தப்படத்துடனும் இல்லாமல் தனியாக திரையிடப்படவிருக்கிறது.

தொடக்கத்தில் தமிழ்நாடெங்கும் சுமார் 25 திரையரங்குகளைத் தேர்வு செய்து அவற்றில் மட்டும் திரையிடுவது என்று முடிவெடுத்து அறிவித்தார்கள்.

அதன்பின் பல்வேறு திரையரங்குக்காரர்கள் படக்குழுவை அணுகி எங்கள் திரையரங்குகளிலும் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
அதை தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார் என்றும் அதனால் இதுவரை சுமார் நூறு திரையரங்குகளில் அரசன் பட அறிமுகக் காட்சிகள் திரையிடப்படும் என்று சொல்கிறார்கள்.

இதற்கான கட்டணம் பதினைந்து ரூபாய் என்பதால் சிம்பு இரசிகர்களைத் தாண்டி பொதுமக்களும் ஆர்வமாக நுழைவுச்சீட்டு கேட்கிறார்களாம்.

தமிழ்த்திரையுலகில் இதுவரை இல்லாத புத்தம்புது முயற்சியான இதற்குக் கிடைத்து வரும் ஆதரவால் படக்குழு மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Related Posts