அஜீத்தின் அடுத்த படம் முடிவு – போனிகபூர் விருந்தில் நடந்த சந்திப்பு
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்
எதுவும் இல்லை.
அதேசமயம் அஜீத்தின் அடுத்த பட இயக்குநர் இவர்தான் என்று பல பெயர்கள் சொல்லப்பட்டுவருகின்றன.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் பேட்டி ஒன்றிலிருந்து சுதா கொங்கரா அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளியானது.
அதுகுறித்து சம்பந்தப்பட்ட யாரும் எதுவும் சொல்லவில்லை.
இப்போது அந்தப் பேச்சு மேலும் பலமாகியிருக்கிறது.
அதற்குக் காரணம், அஜீத்தும் சுதாகொங்கராவும் நீண்ட நேரம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதுதான்.
அண்மையில் தயாரிப்பாளர் போனிகபூரின் பிறந்தநாளையொட்டி ஒரு விருந்து நிகழ்ச்சி நடந்திருக்கிறது.
வெகு சில பிரபலங்கள் கலந்து கொண்ட அந்த விருந்துக்கு அஜீத்தும் வந்திருக்கிறார். சுதா கொங்கராவுக்கும் அழைப்பு இருந்திருக்கிறது.
அங்குதான் இருவரும் தனியாக நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தர்களாம்.
ஏற்கெனவே அஜீத்துக்காக சுதாகொங்கரா வைத்திருக்கும் கதை மிகவும் சிறப்பானது என்று ஜி.வி.பிரகாஷ் சொல்லியிருந்தார்.
இப்போது போனிகபூரின் பிறந்தநாள் விருந்தில் அவர்கள் தனியாக நீண்ட நேரம் உரையாடியதால், அஜீத்தின் அடுத்த படத்தை சுதாகொங்கரா இயக்குவது உறுதியாகி விட்டது என்கிற பேச்சு பலமாகியிருக்கிறது.











