சினிமா செய்திகள்

அஜீத்தின் அடுத்தபடம் மே மாதம் தொடங்குகிறது – விவரம்

கடந்த ஆண்டு அதாவது 2025 ஏப்ரல் 10 அன்று அஜித் நடித்த குட்பேட்அக்லி படம் வெளியானது.தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த அந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.அந்தப்படம் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது.

அந்தப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துவிட்டது.அதற்கு சிலமாதங்கள் முன்பே அஜீத் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார்.

அந்தப்படம் வெளியான நேரத்திலேயே அஜீத்தின் அடுத்தபடத்தையும் ஆதிக்ரவிச்சந்திரனே இயக்குவார் என்று சொல்லப்பட்டது.அவரும் ஓரிரு நிகழ்வுகளில் அதை உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆனாலும்,அஜீத் படப்பிடிப்பில் கலந்துகொண்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அஜீத்தின் அடுத்தபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. அவருடைய மகிழுந்துப் பந்தயம் குறித்த செய்திகள் மட்டும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில்,அடுத்தமாதம் அதாவது மேமாதம் முதல்வாரத்தில் அஜீத்தின் அடுத்தபடத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தின் இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரன் தான்.

தயாரிப்பாளர் யார்?

அஜீத்தின் அடுத்த படத்தைத் தயாரிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ், சத்யஜோதி ஃபிலிம்ஸ், வேல்ஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால் அஜீத்தின் சம்பள விசயத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அந்நிறுவனங்கள் பின்வாங்கிக் கொண்டன.

அதன்பின்,ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அஜீத்தின் அடுத்தபடத்தைத் தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது.இப்போது அந்த நிறுவனம்தான் படத்தைத் தயாரிக்கிறது என்று நினைத்தால் இல்லையாம்.

அஜீத்தின் அடுத்தபடத்தின் தயாரிப்பாளர் அவரேதான் என்று சொல்கிறார்கள்.

பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவை சரியாக வராததால், தன்னுடைய உறுதியான கொள்கை முடிவிலிருந்து பின்வாங்கி அவரே படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படத்தைத் தயாரிப்பது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.

அவருடைய தயாரிப்பு நிறுவனம் சார்பாக அடுத்தபடத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம்.

படப்பிடிப்பு இடங்கள் தேர்வு செய்து, மற்ற நடிகர்களின் தேதிகளைப் பெற்று பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம்.

அவருடைய மகிழுந்துப் பந்தயம் அதையொட்டிய பயிற்சிகள் ஆகியனவும் தொடர்ந்து இருக்கின்றன என்றாலும் படப்பிடிப்பு தொடங்குவது எப்படி என்றால்?

மே மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் பதினைந்து நாட்கள் பந்தயம் மற்றும் அது தொடர்பான வேலைகள் மீதி பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு என்று பிரித்துக் கொண்டாராம்.அதற்கேற்றபடி படப்பிடிப்பு நடத்தும் திட்டங்களை படக்குழு மேற்கொண்டு வருகிறது.

Related Posts