சினிமா செய்திகள்

அரசன் சிக்கலில் நடந்தது என்ன? – முழுவிவரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு மார்ச் 16 முதல் சென்னையில் நடந்துவந்தது.ஏப்ரல் 1 ஆம் தேதி திடீரென அந்தப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது.

தயாரிப்பளர்கள் சங்கமே ஒரு படத்தை நிறுத்தியது ஏன் என்று கேட்டால்?,தயாரிப்பாளர் ஐசரிகணேஷ், சிம்பு மீது புகார் கொடுத்திருப்பதாகவும் அதன் காரணமாகப் படப்பிடிப்பை நிறுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு ஐசர்கணேஷ் தயாரிப்பில் இன்னொரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் சிம்பு.அந்தப்படம் கொரோனா குமார்.ஆனால் அந்தப்படம் அறிவிப்போடு நின்று போனது.

அந்தப்படத்துக்காக சுமார் நான்கு கோடியை முன்பணமாகக் கொடுத்திருந்தாராம் ஐசரிகணேஷ்.அதேநேரம் அந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக சுமார் நான்கு மாதங்கள் வரை காத்திருந்தாராம் சிம்பு.ஆனாலும் படப்பிடிப்பைத் தொடங்கவில்லை.

அதனால் அடுத்த படத்தை ஒப்புக்கொண்டு அதன் வேலைகளில் சிம்பு இறங்கியிருக்கிறார்.

இப்போது,அந்த முன்பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்று ஐசரிகணேஷ் கேட்டிருக்கிறார். உடனே அதைத்தர சிம்பு ஒப்புக்கொண்டாராம். சிம்பு ஒப்புக்கொண்டவுடன், அது மட்டும் போதாது அந்தப்பணத்துக்கான வட்டி, கொரோனா குமார் படத்துக்காகச் செய்த செலவு ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து சுமார் பதினைந்து கோடி தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார் ஐசரிகணேஷ்.

இதனால் கடுப்பான சிம்பு, அவ்வளவு பணம் தரமுடியாது என்று சொல்லிவிட்டார்.அதன்பின்,நீதிமன்றம் சென்றார் ஐசரிகணேஷ்.நீதிமன்றத்தில் சிம்புவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்துவிட்டது.

அதன்பின்னும் ஐசரிகணேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் ஏழரை கோடி தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார் சிம்பு.அந்தப்பணத்தைத் தர முனையும்போது எனக்கு பத்துகோடி வேண்டும் என்று சொல்லிவிட்டாராம் ஐசரிகணேஷ்.இதனால் சிக்கல் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டிருந்தது.

அதன்பின்,அரசன் படப்பிடிப்பு தொடங்கும்வரை காத்திருந்த ஐசரிகணேஷ், அப்படப்பிடிப்பு தொடங்கியதும் புகார் கொடுத்து படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்.

இப்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளோடு நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

வாங்கிய பணத்தை மட்டும்தான் தருவோம் என நடிகர் சங்க தரப்பும், வட்டி, செலவு ஆகியனவற்றோடு சேர்த்து பதிமூன்று கோடி தரவேண்டும் என்று ஐசரிகணேஷ் தரப்பும் சொல்லியிருக்கிறது.

இறுதியில்,வாங்கிய தொகையோடு சுமார் இரண்டரை கோடி சேர்த்து சுமார் ஆறரை கோடியை சிம்பு தரவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த முடிவை, சிம்பு தரப்பு, ஐசரிகணேஷ் ஆகிய இருவரும் ஏற்றுக் கொண்டதால்,அந்தப்பணத்தை எப்படித்தருவது என்பதுவரை பேசி முடிவு செய்திருக்கிறார்கள்.

இதனால்,அரசன் படத்துக்கான இடையூறு முற்றாக நீங்கிவிட்டது என்றம் இன்னும் சில நாட்களில் அதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts