October 29, 2025
சினிமா செய்திகள்

இடைவிடாத முயற்சியால் நடந்த முன்னேற்றம் – மனம்திறந்த நடிகை சரண்யா ரவிச்சந்திரன்

திரைத்துறையில் வெற்றி பெற நிறமும் பணமும் முக்கியமன்று திறமையும் உழைப்பும் இருந்தால் போதும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் நடிகை சரண்யா ரவிச்சந்திரன்.

அண்மையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஜெயில் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கும் அவரிடம் ஒரு பேட்டி.

1.சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த உங்களுக்கு ஜெயில் படத்தில் இரண்டாம் நாயகி வேடம் அடுத்து நடிக்க இருக்கும் படங்களில் முதன்மை வேடம்.இப்போது எப்படி உணர்கிறீர்கள்.? இது எப்படி நடந்தது?

என்னுடய பயணத்தில் இது ஒரு முதல் படி அவ்வளவுதான். நான் என் இலக்கை அடைய இந்த வாய்ப்புகள் எனக்கு ஊக்கமளிப்பதாக இதைப் பார்க்கிறேன்.நான் என்னுடைய வேலைகளை வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளின் போதும் நம்பிக்கையைத் தளர விடாமல் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பதுதான் இந்த வாய்ப்புகளுக்குக் காரணம்.நாம் போடும் இடைவிடாத முயற்சியும் உழைப்பும் பார்த்து அந்த நேரமும் அதிர்ஷ்டமும் கொஞ்சம் மனசு வைத்தால் சினிமாவில் மேஜிக் நடக்கும்னு நம்புகிறேன்.

2.ஜெயில் படத்தில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்புகள் பற்றி..?

வசந்தபாலன் சார் போன்ற பெரிய இயக்குநர் படத்தில் உன்னைப்பார்த்ததில் மகிழ்ச்சி,நல்லா நடிச்சிருக்கே, கண்ணாலேயே பேசியிருக்க என்றெல்லாம் பாராட்டுகள் வந்தன.

3.இப்போது நடிக்கும் படங்கள்…?

பைரி என்றொரு படம் முடித்திருக்கிறேன். சீனுராமசாமியின் அசோசியேட் இயக்கும் படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்கவிருக்கிறேன். வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் படம், ட்ரீம்வாரியர் தயாரிப்பில் ஒரு படம் உட்பட சில படங்களில் நடிக்கிறேன்.

4. முக்கிய வேடம் முதன்மை வேடம் என உயர்ந்திருக்கிறீர்கள். இனி சின்ன வேடங்களில் நடிப்பீர்களா?

சின்ன வேடங்களைப் பார்த்துத்தான் முதன்மை வேடங்கள் வந்தன. அதனால் அவற்றை விட்டுவிட மனமில்லை. அதேநேரம் சின்ன வேடங்களிலேயே நடிக்கக் கூப்பிடுவார்களோ என்கிற அச்சமும் இருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் போராடிக் கொண்டிருக்கிறேன்.

5. பொதுஇடங்களில் மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்களா?

ஆம், நான் ஏற்கெனவே நடித்துள்ள குறும்படங்கள் என்னை மக்களிடம் சேர்த்துள்ளன. மால்களுக்குப் போகும்போது, நீங்கள் அந்த ஷார்ட்பிலிமில் நடித்தவர்தானே என கேட்பார்கள். இப்போது திரைப்படங்கள் பற்றியும் ஓரிருவர் கேட்பார்கள். எல்லோருக்கும் தெரிந்த முகமாக இன்னும் மாறவில்லை. மாற வேண்டும்.

6. வேள்பாரி, செல்லாதபணம் ஆகியனவற்றைப் படித்துவிட்டு அதுகுறித்து காணொலி வெளியிட்டிருந்தீர்கள்.எதனால் அப்படி?

ஒரு நல்ல படம் பார்த்தால் நண்பர்களிடம் உடனே பகிர்ந்துகொள்வோம். அதுபோல ஒரு நல்ல புத்தகம் படித்ததும் அதை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டே வீடியோ போடுகிறேன். அத்தோடு எந்த எந்த புத்தகங்கள் இன்னும் நான் படிக்க வேண்டும் என்று பிறரிடமிருந்து புத்தகங்கள் எனக்கு பரிந்துரைக்கப்படுவது உதவியாக இருக்கு. என் நண்பர்கள் கடந்த இரண்டு வருடங்களாக என் பிறந்த நாளுக்கு புத்தகங்களையே அன்பளிப்பாக கொடுக்கிறார்கள் அது கூடுதல் மகிழ்ச்சி.

7. வாசிப்பை விடாமல் இருப்பது எதனால்?

புத்தக வாசிப்பு என்பது முக்கியமானது. அது ஒரு மனிதனை முழுமையாக்குகிறது.மக்களின் மீதான அணுகு முறையை மேம்படுத்திக்கொள்ள எனக்கு உதவியாக இருக்கிறது.அனுபவத்தை விட சிறந்த ஆசான் ஏது? பல மனிதர்களின் அனுபவங்களை அது எனக்குக் கொடுக்கிறது.அதைவிட எழுத்துகள் எனக்குள் பல மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

8. நிறையப் படிப்பது எழுதுவதற்கான முன்னோட்டமா? கதை எழுதி இயக்குநராகும் எண்ணம் இருக்கிறதா?

அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது. இயக்குநர் என்ற வார்த்தைக்கு நிறைய பொறுப்புகள் இருக்குன்னு நினைக்கிறேன். நிறைய கத்துக்கணும். படிக்கனும்.சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை பண்ணணும் பல பயிற்சிகளுக்குப்பிறகு.

– சுரா

Related Posts