Uncategorized

ஒரு வாரத்துக்குள் வரி கட்ட வேண்டும் – நடிகர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்கிற உயர்தர மகிழுந்தை இறக்குமதி செய்தார்.இந்த மகிழுந்துக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதற்குத் தடை கோரி நடிகர் விஜய் தர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஜூலை 13 அன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர் விஜய்க்கு ரூ. 1 இலட்சம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்.அந்த அபராத தொகையை தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கவும் உத்தரவிட்டது.

அதோடு, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது.வரி என்பது நன்கொடையல்ல; நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாயப் பங்களிப்பு.
சமூகத்துக்குப் பாடுபடுவதாகக் காட்டிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உயர்நீதிம்னறம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இத்தீர்ப்புக்கு எதிராக நடிகர் விஜய் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை என்றும், வரி செலுத்தத் தயாராக உள்ளதாகவும், வரிச்சலுகையை மட்டுமே எதிர்ப்பார்க்கிறோம் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நடிகர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது என்றும், நடிகர் என்பதால் தனக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் நடிகர் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, நீதிமன்றத்தை நாடியதற்காக தனக்கு விதிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் அபராதத்தை நீக்க வேண்டும் என்றும், வணிக வரித்துறை விதிக்கும் வரியை ஒரு வாரத்தில் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், ஒரு இலட்சம் ரூபாய் அபாரத்திற்கும் தடை விதித்தனர். மேலும்,ஏற்கெனவே செலுத்திய நுழைவு வரி 20 விழுக்காடு போக, எஞ்சியுள்ள 80 விழுக்காடு நுழைவு வரியை, நடிகர் விஜய் ஒரு வாரத்திற்குள் செலுத்தவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Posts