சசிகுமார் எடுத்த அதிரடி முடிவு – நல்ல பலன் தருமா?
இயக்குநர் சசிகுமார் நடிகரான பின்பு, கிராமத்து நாயகன் என்று பெயர் பெற்றிருக்கிறார். அதைத் தாண்டி அவர் நடித்த சில படங்கள் சரியாகப் போகவில்லை.
இப்போது, அவருடைய திரைப்பயணத்தில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது.
நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், மாப்பிள்ளை, டிக் டிக் டிக் உள்பட பதிமூன்று படங்களைத் தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் சசிகுமார் நடிக்கிறார்.
இப்படத்தில் சசிகுமார் உடன் தேசியவிருது பெற்ற ஜோக்கர் படத்தின் நாயகன் குருசோமசுந்தரம் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்கிறார்.மேலும் இப்படத்தில் இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப்,
மஞ்சுபெத்து ரோஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான், ஆகிய தரமான படங்களைத் தந்த ஜி.என்.கிருஷ்ணகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
இப்படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.கலகல நாயகனாக வலம் வந்த சசிகுமார் இறுக்கமான காவல்துறை அதிகாரி வேடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இது பலன் தருமா? என்கிற கேள்வி இருந்தாலும்,படம் முழுதும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் பார்வையாளரை படம் தன் வசப்படுத்திக் கொள்ளும் விதமாக கதை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். அது அவரைப் பாதுகாக்கும் என்கிறார்கள்.
இவை போன்ற திரில்லர் படங்களுக்கு இசையின் பங்களிப்பு மிக முக்கியம். அதை இப்படத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு வெகு சிறப்பாக செய்து வருகிறார் இசை அமைப்பாளர் ரோனி ராப்பில்.
சினிமா என்பதே காட்சிமொழி என்பதால், அந்த மொழியை எஸ்.கோபிநாத் அவர்களின் கேமரா மிக அற்புதமாகக் கற்று வைத்திருக்கிறது. அந்த ரிசல்ட் நமக்குத் திரையில் மிகப்பிரம்மாண்டமாக தெரியும். அவரின் ஒளிப்பதிவு இப்படத்தில் பெரிய அளவில் பேசப்படும்.
அன்பறிவ் மாஸ்டரின் அதிரடி சண்டைக்காட்சிகள் எப்போதும் பிரம்மிக்க வைப்பவை. பொதுவாக போலீஸ் கதை என்றால் அங்கு சண்டைக்கு பஞ்சமே இருக்காது. இப்படத்தின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பெரும்பலம் சேர்க்க இருக்கிறது.
கே.ஜே. வெங்கட் ரமணன் படத்தொகுப்பு செய்துவருகிறார்.
இப்படத்தின் வசனங்களை அருள்செழியன் எழுதுகிறார்.
கலை இயக்கத்தை சிவகுமார் யாதவ் கவனிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.