சினிமா செய்திகள்

நடிகர் ராஜேஷ் அகால மரணம் – ரஜினி அதிர்ச்சி

திரையுலகின் கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) என்று போற்றப்பட்ட நடிகர் ராஜேஷ் மறைந்தார்.அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், குரல் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ்.

நடிகர் ராஜேஷ் பன்முகத்தன்மை கொண்ட நடிகராக அறியப்படுகிறார். ‘அந்த ஏழு நாட்கள்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘சத்யா’, ‘விருமாண்டி’, ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் அவர் குணச்சித்திர நடிகராக மிளிர்ந்தவர். விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் உட்பட பலர் நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படமே இவர் நடித்த கடைசிப் படமாக உள்ளது.

திரைத்துறையைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் ஆரோக்கியம் சார்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிலும் தனக்கென தனி இரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவராவார். புத்தக வாசிப்பு சார்ந்தும் பேசுவார். ராஜேஷ் ஒரு பன்முகத் திறமையாளர், சிறந்த மனிதர், நல்லொழுக்கம் நிறைந்தவர்,எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர் என்று அவருக்கு திரையுலகினர் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts