விமர்சனம்

ஆக்‌ஷன் – திரைப்பட விமர்சனம்

விஷால், இராணுவ அதிகாரி, அவருடைய அப்பா பழ.கருப்பையா தமிழக முதல்வர். அண்ணன் ராம்கி துணைமுதல்வர்.

ராம்கியின் நண்பரும் பெரும் தொழிலதிபருமான வின்செண்ட் அசோகன், தமிழக அரசுத்திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும் ஒப்பந்தம் பெற்று அதற்காக 4000 கோடி ரூபாய் வங்கிக்கடன் வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிடுகிறார்.

அதைத் தொடர்ந்து இந்தியக்கட்சியுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இந்தியக்கட்சித் தலைவர் குண்டுவெடித்து கொல்லப்படுகிறார். 

அந்தக்கூட்டத்தில் உடனிருக்கும் ராம்கி தப்பித்துவிடுவதால் அவர் மீதே கொலைப்பழி விழுகிறது. திடீரென அவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்கிறார்.

அப்படி அடுத்தடுத்து நடந்துவிட்ட அதிரடி மாற்றங்களுக்கு யார் காரணம்? ராம்கி தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? என்கிற கேள்விகளுக்கு விடை காண இலண்டன், அஜர்பைஜான், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்குப் பயணம் செய்து உண்மையைக் கண்டுபிடிக்கிறார் விஷால்.

படத்துக்குள் சண்டை இருக்கும் இதில் ஏராளமான சண்டைகளுக்கு நடுவில் கொஞ்சம் படமும் இருக்கிறது.

படம் தொடங்கியதிலிருந்து கடைசிவரை விஷால் யாராவதொருவரிடம் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார். விஷால் மிகுந்த ஈடுபாட்டுடன் சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார்.அவருக்கு இது முக்கியமான படமாக இருக்கும்.

அன்பறிவ் ஆகியோரின் வடிவமைப்பில் சண்டைக்காட்சிகள் ஒரு சில இடங்களில் பிரமிப்பூட்டுகின்றன.

விஷால் கூடவே இன்னொரு இராணுவ அதிகாரியாக தமன்னா. அவரும் விஷாலுக்கு இணையாகச் சண்டை போடுகிறார்.அப்படியே விட்டால் ரசிகர்கள் ஏமாந்துவிடுவார்கள் என்கிற பெருந்தன்மையுடன் அவருடைய அழகை முக்கால்வாசி காட்டி ஒரு பாடலை வைத்திருக்கிறார்கள்.

வில்லியாக வருகிற அகன்ஷாபூரி, உடலழகைக் காட்டும் காட்சிகளை விட சண்டைக் காட்சிகளில் வரவேற்புப் பெறுகிறார்.

ஒரு பாடல் சில காட்சிகளில் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, யார் இவர் எனக் கேட்க வைக்கிறார்.

ஒரு பகுதியில் வருகிற யோகிபாபு சிரிக்க வைக்கிறார். நிறைய இடங்களில் வருகிற ஷாரா சோதிக்கிறார்.

விஷாலின் அண்ணியாக சாயாசிங்  முதன்மை வில்லன் கபீர்சிங்,இராணுவ அதிகாரி ஷாயாஜி ஷிண்டே உட்பட நிறையப் பேர் படத்தில் இருக்கிறார்கள்.

ஹிப்ஹாப் தமிழாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் குறைவில்லை.

டட்லியின் ஒளிப்பதிவு இலண்டன், இஸ்தான்புல் உள்ளிட்ட உலகத்தின் பல நகரங்களையும் தமன்னா,அகன்ஷாபூரி ஆகியோரின் அழகையும் நமக்குக் காட்டுகிறது.

விஷாலை வைத்து மிக மிக ஸ்டைலாக ஒரு ஆக்‌ஷன் படம் என்று முடிவு செய்துவிட்ட சுந்தர்.சி, கதை திரைக்கதைக்காக மெனக்கெடவில்லை. 

சண்டைக்காட்சிகளை வடிவமைப்பது குறித்துப் போட்ட திட்டங்களில் பாதியையாவது திரைக்கதைக்கும் போட்டிருக்கலாம்.

மோடி தோற்றத்தில் வில்லனை வைத்திருப்பதும், ஷாராவை வைத்து சமகால மத்திய அரசாங்கத்தை விமர்சித்திருப்பதும் சுந்தர்.சியின் அனுபவ வெளிப்பாடு.

பாகிஸ்தான் காட்சிகள் காதில் பூசுற்றல்.இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வில்லனாக்கிக் கொண்டிருப்பீர்கள்?

அளவுக்கு மிஞ்சினால் ஆக்‌ஷனும் அலுப்பூட்டும் என்பதற்கு இப்படம் சான்று.

Related Posts