சினிமா செய்திகள்

இயக்குநர் குற்றச்சாட்டு தயாரிப்பாளரின் பதில் குற்றச்சாட்டு – ஆரியமாலா பட சர்ச்சை

பீச்சாங்கை கார்த்திக்,மனிஷாஜித் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆரியமாலா. இப்படத்தை ஜேம்ஸ்யுவன் என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அந்நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது.

ஏன்?

இப்படம் தொடர்பாக வடலூர் ஆதிரை என்பவர் நேற்றிரவு ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது….

கடந்த 2017 ல் “ஆண்டாள்”என்கிறப் பெயரில்…
திரைப்பட நடிகர் “பீச்சாங்கை” கார்த்திக்,நடிகை மணிஷாஜித் ஆகியோரை நாயகன்,நாயகியாக கொண்டும்….
மதிப்பிற்குரிய இயக்குனர் மாரிமுத்து,சிவசங்கர் மாஸ்டர்,உஷாஎலிசபெத்,தவசி உள்ளிட்ட நடிகர்,நடிகைகளை முக்கிய கதாபாத்திரங்களாகவும்…
ஒளிப்திவாளர் ஜெய்,இசையமைப்பாளர் செல்வநம்பி,படத்தொகுப்பாளர் “சகா”ஹரிஹரன்,கலை இயக்குனர் சிவா,நடன இயக்குனர் தஸ்த்தா,சண்டை மிரட்டல் செல்வா-வீரா,தயாரிப்பு மேலாளர் ஹென்றிகுமார்,மக்கள் தொடர்பு ஷேக் ஆகியோர் அடங்கிய படக்குழுவை வைத்து பெஃப்சி அமைப்பின் அனுமதியோடு தமிழ் திரைப்படத்தை இயக்கி முடித்தேன்.
அப்படம் தற்சமயம் “ஆரியமாலா” என்கிற பெயர் மாற்றம் செய்யப்பட்டு தாயாரிப்பாளரே இயக்குனர் எனும் பதிவோடு நாளை 08.07.2024 அன்று இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நடைபெற உள்ளதாக அறிந்து வேதனை அடைந்தேன்.
ஊடக நண்பர்களும்,முகநூல் உறவுகளும்,எழுத்தாளர்களும்,கவிஞர்களும்,சமூக செயற்பாட்டளர்களும் ஒரு படைப்பாளியாக எனது உரிமையை பாதுகாக்க துணை நிற்குமாறு அன்போடு வேண்டுகிறேன்!
நன்றி!!
-இயக்குநர் ஆதிரை
ஆண்டாள்(ஆர்யமாலா)

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அதோடு படப்பிடிப்பை முடித்து குரல்பதிவு (டப்பிங்) நடக்கிற நேரத்தில் எனக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் விலகிவிட்டேன்.இப்போது படத்தில் என் பெயர் எனக்கு ஆதரவாக இருக்கும் உதவி இயக்குநர்கள் பெயர்களையெல்லாம் படத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்…

ஜேம்ஸ்யுவன் மற்றும் வடலூர் ஆதிரை ஆகிய இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்.அடுத்தடுத்த தெருவைச் சேர்ந்திருந்தாலும் ஒருவர் வீட்டுக்கு நேர்பின்னால் வீடு இன்னொருவருடையது.இவர்களில் வடலூர் ஆதிரை ஒரு படம் இயக்கும் முயற்சியில் இருக்கும் நேரத்தில் தானே அப்படத்தைத் தயாரிக்கிறேன் என்று முன் வந்திருக்கிறார் ஜேம்ஸ்யுவன்.

அதன்பின், வடலூர் ஆதிரை கேட்ட ஒரு பெரும் தொகையைக் கொடுத்திருக்கிறார் ஜேம்ஸ்யுவன்.பாதிவரை படப்பிடிப்பு நடந்திருக்கிறது.மீண்டும் வடலூர் ஆதிரை பணம் கேட்டிருக்கிறார்.அப்போது, ஏற்கெனவே கொடுத்த பணத்துக்குக் கணக்குக் கேட்டிருக்கிறார்கள். கணக்கைச் சொல்லாமல் கேட்ட பணத்தைக் கொடுத்தால் மீதிப்படம் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்.அதை ஒப்புக் கொள்ளாத ஜேம்ஸ்யுவன், யார் யாருக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று சொல்லுங்கள்,நாங்களே கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்.

அதன்படி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.அடுத்து வடலூர் ஆதிரை விதித்த சில நிபந்தனைகளை ஏற்கவே முடியாது என ஜேம்ஸ்யுவன் மறுத்துவிட்டாராம்.

அதனால், படப்பிடிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வடலூர் ஆதிரை சென்றுவிட்டார்.அதன்பின் படத்தில் பணியாற்றிய இணைஇயக்குநரைத் துணைக்கு வைத்துக் கொண்டு ஜேம்ஸ்யுவனே படத்தை இயக்கி முடித்தார்.

வடலூர் ஆதிரை போன பின்பு சுமார் ஆறு மாதங்கள் இப்படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டிருந்தன.அப்போதெல்லாம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு இசை வெளியீட்டு விழா என்று அறிவித்ததும் இவ்வாறு அவர் சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது.

இவ்வாறு தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்படுகிறது.

இப்படியான சிக்கலில் இப்படம் மாட்டிக் கொண்டிருக்கிறது.

திரைப்பட இயக்குநராவதென்பது எளிதில் நடந்துவிடும் காரியமில்லை.ஏராளமான போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநரானவர் இப்படிப் புலம்புகிறாரே என்று வருத்தப்படுவதா?

போட்ட பணத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்கிற எதார்த்தநிலையில் இன்னொருவரின் கற்பனைத் திறனை வெளிப்படுத்த தம் உழைப்பால் சேர்த்த பணத்தை முதலீடு செய்ய முன்வரும் தயாரிப்பாளர் பணத்தையும் போட்டுவிட்டு இப்படி மாட்டிக் கொண்டிருக்கிறாரே என்று வருத்தப்படுவதா?

Related Posts