கலாநிதிமாறன் கண்டிப்பு தனுஷ் தவிப்பு – ராயன் பரபரப்பு

தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் ராயன்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்துக்குத் தணிக்கைச் சான்று பெறுவதற்காக அனுப்பியிருக்கின்றனர். படம் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்துக்கு ஏ சான்றிதழ் தான் தரமுடியும் என்று சொல்லிவிட்டார்களாம்.படத்தில் இரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருக்கின்றன என்பதாலேயே இப்படத்துக்கு ஏ சான்றிதழ் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படத்தில், நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் இருக்கும் தனுஷ் இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.
ஏனெனில் படத்தைத் தயாரித்திருப்பது சன் பிக்சர்ஸ்,ஏ சான்றிதழ் படமென்றால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவியலாது.அதுமட்டுமின்றி திரையரங்க வியாபாரத்திலும் சற்று பின்னடைவு ஏற்படும்.தொலைக்காட்சி வைத்திருக்கும் நிறுவனம் தயாரித்திருக்கும் படத்துக்கு ஏ சான்றிதழ் என்றால் அந்நிறுவனத்தினர் கோபப்படுவார்கள் என்பதுதான் தனுஷின் அதிர்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள்/
இதனால்,படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளைச் சீரமைத்து மறு தணிக்கைக்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்திருக்கிறார் தனுஷ்.
இந்நிலையில் இத்தகவலை அறிந்த தயாரிப்பாளர் கலாநிதிமாறன், படத்தை நான் பார்க்கிறேன் என்று கேட்டு படம் பார்த்திருக்கிறார்.அவர் படம் பார்க்கிறார் என்றவுடன் பதட்டத்துடன் காத்திருந்திருக்கிறார் தனுஷ்.
படம் பார்த்துவிட்டு வந்த அவர் மிகுந்த கனிவுடன், படம் மிக நன்றாக வந்திருக்கிறது.இதில் எதையும் வெட்ட வேண்டாம்.அப்படியே வெளியாகட்டும்,வெளியீட்டுக்குப் பிறகு தொலைக்காட்சி ஒளிபரப்புக்கெனெ ஒருமுறை தணிக்கை செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம்.
இதனால் தனுஷ் நிம்மதியடைந்தாலும்,நம்மால் அவர்களுக்கு கஷ்டம் வேண்டாமே என நினைத்து, படத்தைச் சீரமைத்து மறு தணிக்கை செய்துவிடலாம் என நினைத்தாராம்.
ஆனால் கலாநிதிமாறனோ,படத்தில் எந்த மாற்றமும் செய்யவேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம்.
கலாநிதி மாறன் இப்படிச் சொல்வார் என்பதைச் சிறிதும் எதிர்பாராத தனுஷ் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார் என்று சொல்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறது.