கூலி படத்தில் இணைகிறார் அமீர்கான் – புதியதகவல்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தில், நடிகர் சத்யராஜ், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்,மலையாளத் திரையுலகில் இருந்து சௌபின், கன்னடத் திரையுலகில் இருந்து உபேந்திரா, தெலுங்கில் இருந்து நாகர்ஜூனா ஆகியோர் கூலி படத்தில் இணைந்துள்ளனர்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தேவா என்ற பெயரில் நடிக்கிறார்.மலையாள நடிகர் சௌபின் தயால் என்ற பெயரிலும், நாகர்ஜூனா சைமன் என்கிற பெயரிலும், ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி எனு, பெயரிலும், சத்யராஜ் ராஜசேகரன் என்கிற பெயரிலும், உபேந்திரா காலீஷா என்ற பெயரிலும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இவற்றையெல்லாம் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடந்து வந்தது.தற்போது அதற்கு ஓர் இடைவெளி ஏற்பட்டுள்ளது.மீண்டும் அக்டோபர் 15 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.தற்போது ஓய்வில் இருக்கிறார். அக்டோபர் பதினைந்து முதல் மீண்டும் தொடங்கவிருக்கும் படப்பிடிப்பில் சில நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர் இணையவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலிருந்து அம்மொழி பிரபல நடிகர்கள் படத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்தித் திரையுலகிலிருந்து ஒருவரை நடிக்க வைக்கவிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன.இப்போது அது உறுதியாகியிருக்கிறதாம்.
இந்தி நடிகர் அமீர்கான் தான் கூலி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.படத்தில் முக்கியமாக இடம்பெறும் ஒரு சிறப்புத்தோற்றத்தில் நடிப்பதற்காக அவரை அணுகியிருக்கிறார்கள்.அவரும் படம் குறித்த விவரங்கள் அவருடைய கதாபாத்திரம் மற்றும் தோற்றம் பற்றிய விவரங்கள் கேட்டு அவை திருப்தியாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார் என்று சொல்கிறார்கள்.
அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கிய பின்பு,அமீர்கான் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.











