நண்பர்களுடன் கன்னடத்தில் பேசிய ரஜினி – மலரும் நினைவுகள்
இயக்குநர்கள் வசந்த்,மணிரத்னம், சரண் ஆகியோரிடம் பணியாற்றிவிட்டு அன்பே அன்பே படத்தின் மூலம் இயக்குநரானவர் மணிபாரதி. அவர் தற்போது பேட்டரி என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
அவர் தன்னுடைய நினைவலைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அதிலிருந்து….
ரஜினி சார் கதை, வசனம் எழுதி தயாரித்த படம் வள்ளி. இயக்குனர், கே. நடராஜ் சார். நான் அந்தப்படத்தில் உதவி இயக்குனர். இயக்குனர் ஹரியும் அந்தப்படத்தில் உதவி இயக்குனர்.
வள்ளி படத்தில் ஒர்க் பண்ணிய போது ஏற்பட்ட சில அனுபவத்தை மட்டும் இங்கே சொல்கிறேன்.
இங்கே நான் போஸ்ட் பண்ணியிருக்கும் 2 போட்டோஸ், முதல் நாள் மற்றும் கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது.
முதல் நாள் படப்பிடிப்பின் போது ரஜினி சார் என்னை அழைத்து ‘ கதைய படிச்சிங்களா’ எனக்கேட்டார். நான் ‘ படிச்சேன் சார்’ என்றேன். ‘ எப்படி இருக்கு’ எனக்கேட்டார். ‘ நல்லாருக்கு சார்’ என்றேன். ‘ நா எழுதியிருக்குறதுனால சொல்லாதிங்க. எங்கயாவது தப்பு இருந்தா சொல்லலாம்’ என்றார். அவரது அந்த மேன்மைய கண்டு வியந்து போனேன்.
முதலில் எனக்கு பேசப்பட்ட சம்பளம் குறைவுதான். ஒரு நாள், ரஜினி சார், உதவி இயக்குனர்களுக்கு என்ன சம்பளம் என புரடக்சனில் கேட்டார். அவரிடம் என்ன சம்பளம் என சொல்லப்பட்டது. அது குறைவு என்பதை உணர்ந்த அவர் ‘ டைரக்டர் வாசு சாரோட அசிஸ்டெண்ட்ஸ் என்ன சம்பளம் வாங்குறாங்களோ அதை இவங்களுக்கும் குடுங்க’ என உத்தரவிட்டார். காரணம் வாசு சார் அன்று நம்பர் ஒன் டைரக்டர். எனக்கு என்ன சம்பளம் பேசப்பட்டதோ அதுவே அட்வான்ஸ் தொகையாக வந்தது.
வீரப்பன் என ஒரு சீனியர் லைட்மேன் இருப்பார். ரஜினிசார், சூட்டிங்கின் போது எப்போது சிகிரட் பிடித்தாலும், அவரிடமும் பாக்கெட்டை நீட்டுவார். அவர் ஒரு சிகரட் எடுத்துக் கொண்டதும், தான் பற்ற வைத்துக்கொண்டு அவருக்கும் பற்ற வைத்து விடுவார் ரஜினி சார்.
சாலக்குடியில் 30 நாட்கள் சூட்டிங் நடந்தது. அங்கு லோக்கலில் இருக்கும் ஒருவர் எங்களுக்கு ஃபீல்டு கிளியர் பண்ணும் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார். கடைசி நாள் நாங்கள் புறப்படும் போது அவர் நின்று கொண்டிருந்தார். அவரை கவனித்த ரஜினி சார் தனது ஜிப்பாவில் கையை விட்டார். கொத்தாக பணம் வந்தது. அப்படியே அவரிடம் கொடுத்தார்.
அதன் பிறகு பொள்ளாச்சிக்கு ஷிப்ட்டாகி வந்தோம். அங்கும் இரவு பகல் சூட்டிங் நடந்தது. எல்லோரும் டயர்டாக இருப்பதை கவனித்த ரஜினி சார், ஒரு நாள் எல்லோருக்கு லீவ் கொடுத்து, கையில் 1000 ரூபாய் பணமும் கொடுக்க சொன்னார். அவுட்டோரில் மொத்த யூனிட்டுக்கும் ஒரு நாள் லீவ் கொடுத்தால் என்ன செலவாகும். ஆனால் அவர் கவலைப்பட வில்லை.
படம் முடிந்து டப்பிங்கின் போது கதையைப்பற்றி ஒரு விவாதம் வந்தது. அப்போது ரஜினி சாரும் அவரது நண்பர்களும் கன்னடத்தில் பேசிக்கொண்டார்கள். நான் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை கவனித்த ரஜினி சார் ‘ ஏய் தமிழ்ல பேசுங்கப்பா’ என்றார். அதன் பிறகு அந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டேன்.
வடிவேலுவிற்கு அது ஆரம்ப கால படம். ரஜினி சார் தனக்கான சீன் இல்லை என்றாலும் வடிவேலுவிடம் இப்படி நடியுங்கள்,அப்படி பேசுங்கள் காமெடியாக இருக்கும் என சொல்லிக் கொடுப்பார்.
இப்படி ரஜினி சாரின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
ரஜினி சார் தவிர, இயக்குனர் கே. நடராஜ், விட்டல் சார், சுதாகர் சார் என யாரையும் இன்றளவும் மறக்க இயலாது.
கடைசி நாள் படப்பிடிப்பின் போது எல்லோரும் ரஜினி சாருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். நான் அதை கண்டு கொள்ளாமல் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த ரஜினி சார் என்னை அழைத்து ‘ நீங்க என் கூட போட்டோ எடுத்துக்க மாட்டிங்களா’ எனக் கேட்டார்.

manibharathi and rajini
நான் ‘அய்யோ சார்’ என பதறி அவர் பக்கத்தில் ஓடிப் போய் நின்றேன். அந்தப் போட்டோதான் ரஜினி சார் கறுப்பு சட்டையில் இருக்கும் போட்டோ.











