திரைத்துறையினருக்கு உணவு இலவசம் – நடிகர் விக்னேஷ் அறிவிப்பு
கொரோனா ஊரடங்கால் திரைத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது.இதனால் பெரும்பாலான திரைப்படத்தொழிலாளர்கள் உதவி இயக்குநர்கள் மற்றும் துணைநடிகர்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களுக்கு திரைப்பட சங்கங்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்கள். அந்த உதவிகள் போக, ஒருசிலர் தங்களால் இயன்ற அளவு திரைப்படத் துறையில் இருப்பவர்களுக்கு உணவு அளித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் நடிகர் விக்னேஷ் ஒருபடி மேலே போயிருக்கிறார். அவர் சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள சேலம் ஆர் ஆர் பிரியாணிக் கடையை நடத்திவருகிறார்.
அவர் இன்று வெளீயிட்டுள்ள அறிவிப்பொன்றில், தினமும் மாலை 7 மணி முதல் ஒன்பது மனிவரை எங்கள் கடைக்கு வருகிற திரைப்படத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவு இலவசம் என்று சொல்லியிருக்கிறார்.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று மாலை அந்தக் கடைக்குச் சென்ற ஒருவர் கூறியதாவது, நடிகர் விக்னேஷின் அறிவிப்பு உண்மையிலேயே என்னைப் போன்றவர்களுக்கு வரப்பிரசாதம். பசிக்கு உணவு கிடைத்தால் போதுமென்று வந்தேன், இங்கு பரோட்டாவும் கோழிக்கறியும் என்றார்கள். என் சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை என்றார்.
இதுகுறித்து விக்னேஷிடம் தொலைபேசியில் பேசியபோது, ஏதோ என்னால் முடிந்ததைச் செய்யவேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேன், சினிமாவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் இங்கு வரலாம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை அசைவ உணவு வழங்க எண்ணியிருக்கிறேன் என்கிறார்.
நல்ல மனம் வாழ்க!











